Tamilnadu

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி: கோவை, நீலகிரி, தேனியில் அதி கனமழைக்கு வாய்ப்பு!

தென்மேற்கு பருவக்காற்றின் மலைச்சரிவு மழை பொழிவு காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியில் கனமழை முதல் மிக மழையும், தேனி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையும், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி குறைந்த பட்சம் 28 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக நீலகிரி மாவட்டம் மேல் பவானியில் 31 செ.மீட்டர் மழையும், அவலாஞ்சியில் 22 செ.மீட்டர் மழையும், கூடலூர் பஜார் 20 செ.மீட்டர் மழையும், மேல் கூடலூரில் 19 செ.மீட்டர் மழையும், கோவையில் வால்பாறை, சோலையாரில் தலா 13 செ.மீட்டர் மழையும், தேனி பெரியார் 12 செ.மீட்டர் மழையும், கோவை சின்கோனா, சின்னகல்லார், நீலகிரி எமரால்டு, பந்தலூரில் தலா 11 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தை ஒட்டியுள்ள வடக்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

இன்று மற்றும் நாளையும் (ஆக.,4,5) மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல், அந்தமான் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இன்று முதல் ஆகஸ்ட் 6 வரை கேரளா ,கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சத்தீவு, மகாராஷ்டிரா, கோவா கடலோர பகுதிகள், தென்மேற்கு, மத்திய கிழக்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

கடல் அலை முன்னறிவிப்பு..

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை ( 5 .8. 2020 ) இரவு 11 .30 மணி வரை கடல் அலை 3.1 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.