Tamilnadu

“கொரோனாவால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு” : தொடரும் அவலம்!

உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தீவிரமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்க்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக கொரோனா சிகிச்சை அளித்துவந்த மருத்துவர்கள் செவிலியர்கள் அதே கொரோனாவால் உயிரிழந்தால் அவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூட மக்கள் அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பிரதமர் மோடியோ, கொரோனாவுக்கு எதிராக பணியாற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு கைத்தட்டி ஆரவாரம் செய்யுங்கள் என்ற போது ஒட்டுமொத்த மக்களும் வீதிக்கு வந்து கொண்டாடினர். ஆனால், அந்த மருத்துவருக்கே ஒரு அபாயம் எனும் போது ஆறடி இடம் கூட கொடுக்க இந்த மக்கள் தயங்குவது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், சடலமான பின்னர் அவர்களின் உடல்கள் பல மோசமான சூழலை சந்திக்கும் சூழல் இந்தியாவில் உருவாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா பாதித்து சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரின் உடலை எரிக்க மருத்துவத்துறை ஊழியர்கள் முயன்றபோது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுகாதாரத்துறை ஊழியர்கள் பரிதவித்தனர். தமிழகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவமனை செவிலியரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. இவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துகொண்டார்.

ஆனால் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததால் சிகிச்சை பலனளிக்காமல் அர்ச்சனா நேற்று முன் தினம் உயிரிழந்தார். உயிரிழந்த அரச்சானாவின் உடலை மருத்துவமுறைபடி, பாதுகாப்பு ஏற்பாடுடன் அடக்கம் செய்ய நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால் கொரோனாவால் உயிரிழந்த செவிலியரை புதைக்க அப்பகுதி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொண்டப்பட்ட குழி அருகே உறவினர்கள் சுமார் 2 மணிநேரம் சடலத்துடன் காத்திருந்தனர்.

பின்னர் அதிகாரிகள், காவல்துறையினர் ஊர் மக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்பே உடல் புதைக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் மக்களிடையே மனித நேயம் குறைந்து வருவது வேதனையை ஏற்படுத்துவதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

Also Read: “கொரோனாவால் பலியான டாக்டரை அடக்கம் செய்ய அவமதிப்பது தமிழ் நாகரிகத்துக்கே தலைகுனிவு” - மருத்துவர் வேதனை!