Tamilnadu
“ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக்கூடாது” - தமிழக அரசின் பரிந்துரை ஐகோர்ட்டில் தாக்கல்!
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுவதால், இணையதளங்களில் ஆபாச விளம்பரங்கள் மூலம் மாணவர்களின் கவனம் சிதைகிறது. ஆகையால் உரிய விதிகளை வகுக்கும் வரை, ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியும், ஆன்லைன் வகுப்புகளுக்காக மொபைல், லேப்டாப் போன்றவற்றை பார்த்துக் கொண்டிருப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மத்திய அரசுத்தரப்பில் ஆன்லைன் வகுப்புக்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு விதிமுறைகள் வகுக்க உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், விசாரணையை தள்ளிவைத்திருந்தது.
இன்று, இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதன்படி, மழலையர் குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும், ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர், ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த வேண்டும். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை 30 முதல் 45 நிமிடங்கள் 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும். 9 முதல் 12ம் வகுப்பு வரை, 30 முதல் 45 நிமிடங்களுக்கு 4 பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வெறும் பரிந்துரை அடிப்படையில் இருப்பதாகவும், இதை அமல்படுத்த முடியாது எனவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசாணையை முழுமையாக படிக்காமல், எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், மனுவில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் அரசாணையில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கு மாணவர்களின் நலன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல், ஆன்லைன் வகுப்புகள் அனைத்து தரப்பு மாணவர்களும் பெறும் வகையில் ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்பதால், இந்த வழக்கில், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும், பெற்றோர் சங்கங்களுக்கும் தகவல் தெரிவிக்கும் வகையில், ஆங்கிலம், தமிழ் பத்திரிகையில் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 19ம் தேதி விசாரணைக்கு வருகிறது என தெரிவித்து விளம்பரம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
மேலும், ஆன்லைன் வகுப்புகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!