Tamilnadu

ஆன்லைன் சூதாட்ட விவகாரம்: விராட் கோலி, தமன்னாவை கைது செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்கு!

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவிடக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னயை சேர்ந்த வழக்கறிஞர் சூரியபிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாகவும், ஆரம்பத்தில் பொழுதுபோக்குக்காக அதற்குள் செல்லும் இளைஞர்கள்,அதற்கு அடிமையாகிவிடும் சூழல் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி நடிகை தமன்னா போன்ற பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் மூலம் இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டத்திற்காக, வட்டிக்கு பணம் வாங்கி பின்னர் அதை கட்டமுடியாத சூழல் ஏற்படும்போது, இளைஞர்கள் தற்கொலை செய்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ளூவேல் விளையாட்டால் மாணவர்கள் தற்கொலைக்கு தூண்டபட்டதையடுத்து, உயர் நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆன்லைன் சூதாட்டங்கள் அதை விட வீரியமானது என்பதால் இதில் உடனடியாக நீதிமன்றம் தலையிட்டு அதற்கு தடை விதிக்க வேண்டுமெனவும், ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை நிர்வகித்து வருபவர்களை கைது செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதோடு, அத்தகைய ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்காக விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா உள்ளிட்டோரையும் கைது செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வில் வழக்கறிஞர் சூரிய பிரகாசம் முறையிட்ட நிலையில், மனுவை வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Also Read: “ஆன்லைனில் பணத்தை இழந்ததால் தற்கொலை” - சிக்கிய இளைஞரின் கடிதம் : உயிர்குடிக்கும் ஆன்லைன் சூதாட்டம்!