Tamilnadu
“காவி துண்டு போட்டவருக்கு மனநிலை சரியில்லை”- அண்ணா சிலையை அவமரியாதை செய்தவர் குறித்து காவல்துறை விளக்கம்!
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தின் மீது நள்ளிரவில் காவித் துணி போடப்பட்டு, அருகே குப்பைகள் கொட்டப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் பெரியார் சிலை மீது காவித் சாயம் பூசியது, புதுவையில் எம்.ஜி.ஆர். சிலை மீது காவித் துண்டு போர்த்திய சம்பவங்களைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணா சிலை பீடத்தின் மீது காவித் துணி போட்ட நிகழ்வு கடும் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிகழ்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம்! தங்களுக்கு அடையாளம் காட்டிக்கொள்ள தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மாமேதைகள் மீது வன்மம் காட்டுகிறார்கள்!” எனச் சாடியிருந்தார்.
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினருமான மனோ தங்கராஜ் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் குழித்துறை பகுதியில் திரண்டு, இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலிஸார் காவிக் கொடியைபோர்த்தியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கன்னியாகுமரி குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலையின் பீடத்தில் காவித் துண்டு போட்டவர் மனநோயாளி என்றும் எந்த உள்நோக்கத்துடனும் இந்த நிகழ்வு நடைபெறவில்லை என்றும் மாவட்ட காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
தலைவர்களின் சிலைகளை அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் மன நோயாளிகள் செய்ததாக திசை திருப்பும் போக்கு தொடர்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Also Read
-
ஒன்றிய பா.ஜ.க - மணிப்பூர் மாநில பா.ஜ.க இடையே மோதல்! : ஒன்றிய அரசிற்கு கெடு விதித்து தீர்மானம்!
-
ஊட்டச்சத்தாக விளங்கும் அரசு... : “திட சக்தியுள்ள குழந்தைகளை உருவாக்குதன் அடையாளம்” - முரசொலி புகழாரம் !
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !