Tamilnadu

ஊரடங்கு நீட்டிப்பு: மத்திய அரசின் வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி!

கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து இன்று மருத்துவதுறை நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்தித்தின் போது 7வது கட்டமாக ஊரடங்கை நீட்டித்து அறிவித்தார். இதனைத் தொடர்ந்து வெளிட்டுள்ள அறிக்கையில், “31.7.2020 முடிய தற்போதுள்ள ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31.8.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எவ்வித தளர்வுகளும் இன்றி, தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுடன் கீழ்காணும் பணிகளுக்கும் 1.8.2020 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

- 75 சதவீத பணியாளர்களுடன் அனைத்து தொழில் நிறுவனங்கள், தனியார் நிறுவங்கள் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட அனுமதி.

- உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது. உணவகங்களில் முன்பு இருந்தது போன்று காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.

- பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதிக்கப்படும்.

- அத்தியாவசிய தேவைகளுக்கான திறக்கப்பட்டிருக்கும் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகளைத் திறக்கலாம்.

- இரயில் மற்றும் விமான போக்குவரத்தைப் பொறுத்தவரை தற்போதுள்ள நிலையே தொடரும்.

- இ-பாஸ் நடைமுறை தொடரும். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும்போதும், வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் போதும், சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடம் / சென்னை மாநகராட்சி ஆணையரிடம் முறைப்படி E-Pass பெற வேண்டும்.

- பேருந்து, ரயில்கள் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைக்கான தடை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தொடரும்.

எனவே, பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன். நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது படிப்படியாக தளர்வுகள் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் இத்தகைய அறிவிப்பி நேற்றைய தினம் மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகளுக்கு முற்றிலும் மாறாக உள்ளது. மாநில அரசுகளின் கருத்துக்களை கவணத்தில் எடுத்துக்கொள்ளாமல் மத்திய அரசு தனிச்சையான செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Also Read: #Unlock3 : இரவு நேர ஊரடங்கு இனி கிடையாது : புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - மத்திய அரசு அறிவிப்பு!