Tamilnadu
நியூஸ் 18 முதன்மை ஆசிரியர், பணியாளர்கள் மீது அவதூறு குற்றச்சாட்டு... மாரிதாஸுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை!
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் முதன்மை ஆசிரியர் குணசேகரன். பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக ராம்நாத் கோயங்கா விருது, விகடன் விருது என பல விருதுகள் பெற்றவர். அதேபோல, மூத்த தொகுப்பாளர் ஜீவசகாப்தன் செய்தித்துறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக யூ-டியூப் சேனல் நடத்தி வரும் மாரிதாஸ் என்பவர் மேற்கண்ட இருவர் குறித்தும் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றிய மூத்த செய்தியாளர் அசீப் உள்ளிட்டோர் குறித்தும் அவதூறாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அந்த வீடியோக்களில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணிபுரியும் பெரும்பாலானோர் திராவிடர் கழகம் மற்றும் தி.மு.கவின் பிண்ணனியில் செயல்படுவதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
இந்நிலையில், தங்களுடைய நிறுவனம் மற்றும் ஊழியர்களுக்கு எதிராக அவதூறு செய்தி வெளியிட்ட மாரிதாஸிடம் 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நியூஸ் 18 தொலைக்காட்சியின் சுதந்திரமான செயல்பாடுகளை தடுக்கும் வகையில் திட்டமிட்டே ஆதாரமற்ற வீடியோக்களை தயாரித்து ஒன்றின் பின் ஒன்றாக மாரிதாஸ் வெளியிட்டு வருவதாக மூத்த வழக்கறிஞர் எம்.எஸ்.கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக குணசேகரன் மற்றும் ஜீவசகாப்தன் ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவதூறு வீடியோக்களை மாரிதாஸ் சட்டவிரோதமாக வெளியிட்டதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.
மேலும், நியூஸ் 18 செய்தியாளர்கள் குறித்த தன்னுடைய புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நியூஸ் 18 நிறுவனம் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறி போலி மின்னஞ்சல் வெளியிட்டும் மாரிதாஸ் மோசடி செய்தது குறித்து சென்னை சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் எம்.எஸ்.கிருஷ்ணன் தெரிவித்தார்.
மாரிதாஸின் இந்த திட்டமிட்ட சதியால் மக்கள் மத்தியில் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி மீதான நம்பகத்தன்மை இழக்கக்கூடிய சூழல் ஏற்படுவதாகவும் நிறுவனம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
Also Read: கொரோனாவை வைத்து பிரிவினையை உண்டாக்குவதா? வெறுப்பு பிரசாரம் செய்த மாரிதாஸ் மீது வழக்குப்பதிவு
தன்னுடைய யூ- டியூப் சேனலின் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காக நியூஸ்18 தொலைக்காட்சி மற்றும் அதில் பணியாற்றும் ஊழியர்களை குறிவைத்து அவதூறு கருத்துகளை பரப்புவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஊடக சுதந்திரத்திற்கும் மாரிதாஸ் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதால் நஷ்ட ஈடாக 1.5 கோடி ரூபாய் வழங்க மாரிதாஸுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தன்னுடைய செயலுக்கு மாரிதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நியூஸ் 18 தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, நியூஸ் 18 தொலைக்காட்சி மற்றும் அதன் ஊழியர்கள் குறித்து அவதூறு வீடியோக்கள் வெளியிட மாரிதாசுக்கு இடைக்கால தடை விதித்தார்.
மேலும், இதுவரை வெளியிட்ட அனைத்து அவதூறு வீடியோக்களையும் நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, இது தொடர்பாக ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மாரிதாசுக்கு உத்தரவிட்டார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!