Tamilnadu
“அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரத்தில் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?” : உயர் நீதிமன்றம் கேள்வி!
தென்காசி மாவட்டம் வாகைக்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவரின் உடலை தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கை நாளை ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
தென்காசி மாவட்டம் வாகைக்குளம் கிராமத்தில் வசித்தவர் அணைக்கரை முத்து. இவருக்குச் சொந்தமான நிலத்தில் தோட்டத்தைச் சுற்றி மின்வேலி அமைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகள் விசாரணைக்காக வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைத்துச் சென்ற அணைக்கரை முத்து திடீரென உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. வனத்துறையினர் விசாரணையின்போது தாக்கியதால் அணைக்கரை முத்து உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அவரது மனைவி பாலம்மாள் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், “விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் தாக்கப்பட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார்.
ஆகவே கணவரின் உடலை மூத்த தடயவியல் மருத்துவர்கள் குழு உடற்கூறு ஆய்வு செய்யவும், தொடர்புடைய அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யவும், வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது, அப்போது அரசு தரப்பில் அவகாசம் கோரியதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று ஒத்திவைத்தனர். இன்று வழக்கு விசாரணையின் போது, விவசாயி அணைக்கரை முத்து உயிரிழந்த விவகாரம் மாலையில் உடற்கூறு ஆய்வு செய்தது ஏன்?
மாலை 4 மணிக்கு மேல் உடற்கூறு சோதனை செய்யக் கூடாது என்ற உத்தரவு அணைக்கரை விவசாயி உடல் கூறு பரிசோதனையில் மீறப்பட்டதா? என்பது குறித்து நாளைக்கு நிலைஅறிக்கை, உடற்கூறு அறிக்கை, உடற்கூறு வீடியோ பதிவையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பொங்கியப்பன் உத்தரவு பிறப்பித்தார்.
தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹென்றி திபேன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!