Tamilnadu
“கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாஜக” : தமிழக ஊடகங்களை பாதுகாக்க தி.மு.க புதிய முன்னெடுப்பு!
இந்திய நாட்டின் அரசியலில், வலதுசாரிகளின் இந்துத்வா கருத்தியலையும், மனுவாத அராஜகங்களையும் தலைதூக்க விடாமால் தமிழகம் தடுத்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஆதிகத்தைச் செலுத்தி வரும் வலதுசாரி கும்பல் தமிழகத்தில் காலூன்ற விடாமல் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னின்று எதிர்க்கின்றன.
இதனால் தமிழகத்தில் தங்களின் செல்வாக்கை பெருக்க பா.ஜ.க பல குறுக்கு வழிகளை கையில் எடுத்துள்ளது. அந்தவகையில், தங்களது மோசமான ஆட்சி அம்பலப்படுவதால் ஊடகவியாளர்களை குறிவைத்து தாக்குவதும், ஊடகங்கள் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்துவது மற்றும் வழக்குப் பதிவு செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனை முறியடிக்க தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் காணொளிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க அரசின் கொரோனா கால மோசடிகள் மற்றும் நிர்வாகத்திறன் தோல்வி குறித்தும், ஊடகங்கள் மூலம் பா.ஜ.க தமிழகத்தில் நுழைவதற்கு எடுக்கும் முயற்சிகள் குறித்தும் அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
அப்போது, கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை தி.மு.க தலைமையில் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மாணத்தில், “திராவிட இயக்கம், பொதுவுடைமை இயக்கம் மற்றும் மதச்சார்பற்ற அமைப்புகளால் சித்தாந்த ரீதியாகவும், செயல்பாட்டு முறைகளாலும், யாரும் உட்புக இயலாத வண்ணம், நன்கு பண்படுத்தப்பட்டிருக்கும் தமிழகம், பா.ஜ.க.வின் கண்ணை உறுத்துகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
அதனால் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு, முன்னதாகவே ஊடக வெளிச்சத்தில் குளிர்காய நினைக்கிறார்கள். அதற்கு வசதியாக, நமது பாரம்பரிய பன்முகத்தன்மைக்கு முற்றிலும் எதிரான, ‘ஒரே சித்தாந்தம்’ என்பதில் ஈடுபாடு கொண்டுள்ள குறிப்பிட்ட ஒரு சிலரை அதிகாரப்படுத்தி அமர வைத்திட ஆங்காங்கே ஆசனம் தேடும் பிரயத்தனத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அப்படி இடம்பிடித்துக் கொடுத்து விட்டால், ஊடகங்கள் அனைத்தும் ஒரே குரலில் பா.ஜ.க.வை உயர்த்திக் கோஷம் போடுவார்கள்; அந்த பொய் முழக்கத்தில் எப்படியாவது கோட்டைக்குள் நுழைந்து விடலாம் என்று தப்புக் கணக்கு போடுகிறார்கள். அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையான கருத்துரிமையைத் தொடர்ந்து நசுக்கி வரும் மத்திய ஆளுங்கட்சியினரான பா.ஜ.க.வினர், தமிழக ஊடகச் சுதந்திரத்திற்கு ஊறு விளைவிக்கும் நோக்கில் செயல்படத் தொடங்கி இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும்.
தமிழ்நாட்டின் செய்தி ஊடகங்களில் விவாதத் தலைப்புகள் தொடங்கி, நெறியாளர் - பங்கேற்பாளர்களைத் தீர்மானிப்பது வரை, தங்களின் அதிகாரக் கட்டளைக்குள் அடங்கி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்கு இங்குள்ள அ.தி.மு.க. அரசும் துணை போகிறது. தேர்தல் கணக்கினால் ஏற்பட்டுள்ள அந்த எதேச்சதிகார ஆசை ஏற்பட்ட வேகத்திலேயே நிராசையாகிவிடும் என்பதை அவர்கள், சரித்திரத்தைச் சற்றுப் பின்னோக்கிப் பார்த்து உணரவேண்டும்.
பா.ஜ.க - அ.தி.மு.கவின் கட்டளைகளுக்குப் பணிந்து, நடுநிலையைக் காவுகொடுக்கும் ஊடகங்கள், காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் மங்கி மறைந்துவிடும். அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்சி’, கருத்துத் தணிக்கை காலகட்டத்திற்கு தமிழகத்தைப் பின்னோக்கி இழுக்க நினைப்பது, எள்ளளவும் பலிக்காது.
அப்படியே பா.ஜ.க - அ.தி.மு.கவின் அழுத்தம், அச்சுறுத்தல், ஆசை காட்டுதல் ஆகியவற்றிற்குப் பயந்து, பணிந்து, ஜனநாயக நெறிகளையும், கருத்துச் சுதந்திரத்தையும், நடுநிலையையும்; ஊடகங்கள், இரண்டாம்பட்சமாகக் கருதி, பின்னிடத்திற்குத் தள்ளும் கடினமான முடிவை மேற்கொள்ளுமானால், தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிகள் அனைத்தும் அத்தகைய ஊடகங்களின் நிகழ்வுகளில் பங்கேற்காமல் புறக்கணித்திட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும்.
ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள்; மக்கள் குரலே மகேசன் குரல்! மகத்தான அந்தக் குரலை, அச்சு - காட்சி ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், நெரிக்க நினைப்பது, மீள முடியாத கொடுந்தீமையில் வீழ்த்திவிடும். ஆகவே கருத்துச் சுதந்திரத்தை முறையாகப் பேணிப் பாதுகாத்திட, அனைத்து எதிர்க்கட்சிகளையும் உள்ளடக்கி ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு ஒன்றினை அமைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
அனைத்துக் கட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தி.மு.க. - பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் - கோபண்ணா, ம.தி.மு.க. - மல்லை சத்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி - ரவிக்குமார் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - அப்துல் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி - அப்துல் சமது, கொங்குநாடு மக்கள்தேசிய கட்சி - சூர்யமூர்த்தி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி - ஜெயசீலன் ஆகியோர் உள்ளனர். தி.மு.க முன்னெடுத்துள்ள இத்தகைய நடவடிக்கைக்கு பலரும் ஆதரவு அளித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!