Tamilnadu

"சமூக நீதிக்கான மாபெரும் வெற்றி" - OBC இடஒதுக்கீடு வழக்கு வெற்றி குறித்து வில்சன் எம்.பி பெருமிதம்!

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டா இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இடஒதுக்கீடு கோரும் உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வழக்கை தி.மு.க சார்பில் நடத்தி வெற்றி கண்ட மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி, இந்த தீர்ப்பு சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி எனத் தெரிவித்துள்ளார்.

வழக்கின் தீர்ப்பு வெளியானதும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு அளவில் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கோட்டா இடங்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என்ற மத்திய அரசு மற்றும் மருத்துவக் கவுன்சிலின் வாதம் சென்னை உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது." என்றார்.

Also Read: 50% OBC இட ஒதுக்கீடு ஓர் எளிய விளக்கம்- வழக்கறிஞர் வில்சன் எம்.பி

மேலும், " இடஒதுக்கீடு பெற OBC மாணவர்களுக்கு உரிமை உள்ளது. இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க மத்திய, மாநில அரசுகள் மற்றும் மருத்துவக் கவுன்சில் குழுக்கள் இணைந்து முடிவெடுக்க வேண்டும். மூன்று மாதத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது." என்றார்.

குறிப்பாக, " மத்திய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு கொடுக்கப்படும் போது கேட்காத மருத்துவக் கவுன்சில், மாநில இடங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என எதிர்க்க முடியாது." என்று உயர்நீதிமன்றம் சுட்டிக் காட்டியதாக தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு, தமிழக மாணவர்களுக்கு மட்டும் அல்ல, இந்தியா முழுவதும் உள்ள OBC மாணவர்களுக்கும் பயன்தரும் தீர்ப்பு என அவர் தெரிவித்துள்ளார். இது சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பெருமிதம் கொண்ட அவர், தமிழகம் சமூக நீதி போராட்டத்தில், ஓர் முன்னோடி என மீண்டும் நிரூபித்துள்ளதாக தெரிவித்தார்.

இதை பிற மாநில அரசுகளும் முன்னுதாரணமாகக் கொண்டு, தங்கள் மாநில மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.