Tamilnadu
இழப்பீடு தராமல் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்ட ஐ.ஓ.சி.எல் - விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
ஐ.ஓ.சி.எல் நிறுவனம் சார்பில் நாகப்பட்டினலிருந்து தொடங்கி கடலோர மாவட்டங்கள் வழியே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் குலையன்கரிசல், பொட்டல்காடு, சேர்வைகாரன்மடம் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் தற்போது நடைபெற்று வருகிறது.
பொட்டல்காடு பகுதிகளில் விவசாய நிலங்களின் வழியே ஐ.ஓ.சிஎல் நிறுவனத்தினர் எரிவாயுக் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக முத்தையாபுரம் காவல் நிலையத்தில் பல்வேறு புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி துணை ஆட்சியர் தலைமையில் ஐ.ஓ.சி.எல் நிறுவன அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்தும் விவசாயிகளுக்கு தற்போது அளித்ததைவிட மூன்று மடங்கு இழப்பீடு பணம் தரவேண்டும், பொட்டல்காடு குளத்தை 6 அடி ஆழத்தில் தூர்வார வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தொடர்ந்து வந்தனர்.
ஆனால் சமாதான கூட்டத்தில் பேசியபடி விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை நிறுவனத்தினர் தரவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் எண்ணெய் நிறுவனத்திடம் நிலம் ஒப்படைப்பதற்கு பணம் வாங்காத விவசாயிகளின் நிலத்திலும் விவசாய பயிர்களை சேதப்படுத்தி எரிவாயு குழாய் பதிக்கும் பணியில் நிறுவனத்தினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பொட்டல்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே நிலவி வந்த அசாதாரண சூழலை தணிக்கும் பொருட்டு மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு எரிவாயு குழாய் பதிக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஐ.ஓ.சி.எல். அதிகாரிகளுடன் நடைபெற்றது. இதற்கு போட்டியாக குலையன்கரிசல், பொட்டல்காடு சுற்றுவட்டார கிராம விவசாயிகள் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தினர் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தராதது மற்றும் அத்துமீறல்கள் குறித்து ஆலோசித்தனர்.
ஆலோசனையின் முடிவில் விவசாயிகள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களின் வழியே கொண்டு செல்வதற்கு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தோம். ஆனால் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி காவல்துறையின் துணையுடன் எண்ணெய் நிறுவனத்தினர் குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் அச்சுறுத்தலால் தற்போது 70 சதவீத விவசாயிகள் எண்ணெய் நிறுவனம் வழங்கிய இழப்பீடு தொகையை பெற்றுக்கொண்டு நிலங்களை அவர்களுக்கு வழங்கி உள்ளனர். ஆனால் நிலம் கையகப்படுத்த பணம் வாங்காத விவசாயிகளின் விவசாய நிலத்திலும் ஐஓசிஎல் அதிகாரிகள் அத்துமீறி எரிவாயு குழாய்களை பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து புகார் அளித்தால் காவல்துறை அதிகாரிகளும் எண்ணெய் நிறுவன அதிகாரிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். ஏற்கனவே எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் ஏற்படுத்தப்பட்ட சமாதான பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கும், விவசாய சங்கத்திற்கும் விவசாய நிலங்களுக்கும் சில வாக்குறுதி அளித்திருந்தனர்.
ஆனால் தற்பொழுது அவற்றை மறந்துவிட்டு காவல்துறையுடன் துணையுடன் குழாய் பதிக்கும் பணிகளை மட்டும் செய்துவிட்டு சென்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். இப்பகுதி விவசாயிகள் வாழ்வாதாரமே நிலம்தான். நிலத்தை கையகப்படுத்தி எரிவாயு குழாய் பதிப்பதற்கு எங்களுக்கு தரும் இழப்பீடு போதுமானதாக இல்லை.
தற்பொழுது வழங்கியுள்ள இழப்பீட்டு தொகையை விட மூன்று மடங்கு அதிகம் வழங்கவேண்டும். பொட்டல்காடு குளத்தை 6 அடி ஆழத்துக்கு தூர்வாரி தர வேண்டும். மேலும் பாசன கால்வாய்கள், கண்மாய்கள், வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றையும் எண்ணெய் நிறுவனத்தினர் தூர்வாரி தருவதாக உறுதி அளித்திருந்தனர். அவற்றையும் நிறைவேற்றித் தரவேண்டும்.” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!