Tamilnadu
சாத்தான்குளம் போலிஸாரால் உயிரிழந்த மகேந்திரன் விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "2009இல் கணவர் உயிரிழந்த நிலையில் மகன்கள் துரை மற்றும் மகேந்திரனுடன் வசித்து வருகிறார். கடந்த மே 18ஆம் தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்த வழக்கில் மகன் துரைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ் மே 22ஆம் தேதி எனது வீட்டிற்கு வந்து எனது மகன் துரை பற்றி விசாரித்தார். மே 23ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் எனது சகோதரி வீட்டிற்கு சென்ற காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ரகுகணேஷ் ஆகியோர் எனது மகன் துரை இல்லாத நிலையில் இளையமகன் மகேந்திரனை அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர்.
2 நாட்கள் சட்டவிரோத காவலில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இதனால் அவரது தலை உட்பட பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையில் 24ம் தேதி இரவு பத்து முப்பது மணி அளவில் அவரை விடுவித்தனர். ஏறத்தாழ சுயநினைவை இழக்கும் அளவிற்கு தாக்கப்பட்ட நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மகனை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் உடல் நலம் மிகவும் மோசம் அடையவே, மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல உண்மைகள் வெளிவந்திருக்கும் நிலையில் அதைத் தொடர்ந்து மூன்று கிராம பஞ்சாயத்து மற்றும் ஊர் பெரியவர்களுடன் இணைந்து எனது மகன் இறப்பு குறித்து முறையாக விசாரித்து தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே எனது மகனின் இறப்பு குறித்து முறையாக விசாரிக்கவும் எனக்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியுள்ளார். இன்று இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் இந்த வழக்கு காவல்துறை தலைவர் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.
இதைத்தொடர்ந்து, அரசுத் தரப்பு வழக்கறிஞர், மனுதாரர் தூத்துக்குடி காவல்துறை மீது முதலில் நம்பிக்கை வைக்க வேண்டும். மனுதாரருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி பொங்கியப்பன், இந்த வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும்; நெல்லை சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தற்போது வரை நடைபெற்ற விசாரணை குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
Also Read
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!