Tamilnadu
சாத்தான்குளம் காவலர்களிடம் 4 1/2 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ - முக்கிய விவரங்கள் கிடைத்ததாக தகவல்!
சாத்தான்குளம் தந்தை மகன் காவல்நிலைய விசாரணையின்போது தாக்கி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக சாமத்துரை, செல்லத்துரை, வெயில்முத்து என மூன்று பேரை காவலில் எடுத்துள்ள சி.பி.ஐ அதிகாரிகள் அவர்களை சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து 4½ மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
சாத்தான்குளம் பகுதியில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்ட தந்தை மகன் இருவரும் காவல்நிலைய விசாரணையில் கொல்லப்பட்ட சம்பவத்தில் சி.பி.ஐ போலிஸாரின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கு முன்பாக சி.பி.சி.ஐ.டி போலிஸார் இந்த வழக்கு சம்பந்தமாக விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர்.
அவர்களில் முதற்கட்டமாக கடந்த 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஆய்வாளர் உட்பட 5 நபர்களை சி.பி.ஐ போலிஸார் கஸ்டடியில் எடுத்து சாத்தான்குளம் காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணை அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இவ்வழக்கில் இரண்டாவதாக நீதிமன்றத்திலிருந்து சி.பி.ஐ காவலில் எடுத்த காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில்முத்து ஆகியோரை இன்று (ஜூலை 21) மதுரை சி.பி.ஐ அலுவலத்தில் இருந்து சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு சி.பி.ஐ போலிஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டு கிடைக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட 3 காவலரிடம் பல்வேறு கோணங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சுமார் 4½ மணி நேரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்த சி.பி.ஐ அதிகாரிகள் உயிரிழந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். அப்போது காவல் நிலையத்தில் இருந்து காயம்பட்ட நிலையில் சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக சி.பி.ஐ அதிகாரிகளிடம் தெரிவித்த ஜெயராஜின் உறவினர்களான தாவீது மற்றும் தேசிங்கு ராஜா ஆகியோரிடமும் விசாரணை நடத்தி எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றனர். இதைத் தொடர்ந்து சி.பி.ஐ குழுவினர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!