Tamilnadu

“வீல்சேர் நுழையாத கழிப்பறை; தலையணை கிடைக்காத அவலம்” - கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மனுஷ்யபுத்திரன் வேதனை!

கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வசதியற்ற கழிப்பறையால் அவதிப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

“ஒரு வருத்தமான செய்தி. எனக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

நான்கு நாட்களாக தொடர் காய்ச்சல். சந்தேகப்பட்டு பரிசோதனை செய்துகொண்டதில் பாசிட்டிவ் என்று வந்துவிட்டது. சமீபத்தில்தான் இருதய அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பது அவசியம் என என் மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நான்கு மாதத்தில் கொரோனா பற்றி எவ்வளவோ எழுதிவிட்டேன். ஊடகங்களில் எவ்வளவோ பேசிவிட்டேன். இப்போது நானே அதன் நேரடி சாட்சியமாகவும் ஆகியிருக்கிறேன்.

கொரோனா வார்டின் முதல் நாள் அனுபவமே வெகுசிறப்பாக உள்ளது. பாத்ரூமில் வீல்சேர் நுழையவில்லை. 'இப்படி ஒரு பிரச்சினையை இப்போதுதான் எதிர்கொள்கிறோம்' என்கிறார்கள். ஒரு தலையணை கேட்டு ஐந்து மணி நேரத்திற்குப்பிறகு இப்போதுதான் கிடைத்தது. ஒரு பேய் பங்களாவின் பேரமைதி. இவ்வளவு வசதியின்மைக்கு நடுவே என்னை நானே கவனித்துக்கொள்ளவேண்டும். கொரோனாவைவிட அதுதான் கொடுமையாக இருக்கிறது.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Also Read: “உயிரிழந்த தகவலையே தெரிவிக்காமல் அலைக்கழித்த கொடுமை”- மருத்துவமனை அலட்சியத்தால் குடும்பத்தினர் அதிர்ச்சி!