Tamilnadu

வருமானம் இல்லாதபோது வாடகை கேட்டதால் ஆத்திரம்: உரிமையாளர் ஓட ஓட விரட்டிக்கொலை; குன்றத்தூரில் பகீர் சம்பவம்

ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான குணசேகரன் என்பவர் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். இவருக்கு குன்றத்தூரில் உள்ள பண்டாரத்தெருவில் சொந்த வீடு ஒன்று உள்ளது. அதனை அஜித் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாததால் கடந்த நான்கு மாதங்களாக அஜித் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அஜித்தின் பெற்றோரிடம் உரிமையாளர் குணசேகரன் வாடகை வசூலிப்பது குறித்து கேட்டுள்ளார்.

இதனையடுத்து, குணசேகரனுக்கும் அஜித்தின் குடும்பத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வாடகைதாரர் அஜித் கத்தியால் உரிமையாளர் குணசேகரனை குத்தியுள்ளார்.

பின்னர் தப்பியோடிய குணசேகரனை ஓட ஓட விரட்டிச் சென்று அவரை அஜித் மீண்டும் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் குணசேகரனின் உயிர் பிரிந்திருக்கிறது. இதனையடுத்து கொலை செய்து தப்பிக்க முயற்சித்த அஜித்தை குன்றத்தூர் போலிஸார் கைது செய்திருக்கிறார்கள்.

ஊரடங்கு நேரத்தில் வாடகை வசூலிக்கக் கூடாது என அரசு அறிவுறுத்தி இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறி வருகிறது. மேலும் வேலையும் இல்லாமல் வருமானமும் இல்லாமல் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மக்கள் இது போன்ற சம்பவங்களை முற்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

ஆகையால் இம்மாதிரியான சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Also Read: வாடகை வசூலிக்கத் தடை: ஏட்டளவில் உள்ள அரசாணையை செயல்படுத்தாது ஏன்? அதிமுக அரசுக்கு எதிராக வழக்கு!