Tamilnadu

தோண்டத் தோண்ட வெளிவரும் போலிஸின் அட்டூழியம்! - தூத்துக்குடி காவல் நிலையத்தில் தாக்கப்பட்ட ஆசிரியை

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அதிகாரத்தை பயன்படுத்தி காவல் துறையினர் செய்த அராஜகங்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி காவல் நிலையத்தில் தான் தாக்கப்பட்டு, பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதாக, ஆசிரியை ஒருவர் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தனியார் பள்ளி ஆசிரியரான சாந்தி. இவரது அண்ணன் வாசுதேவன் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர்மேனாக பணிபுரிந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வருகை தந்தார். அதனால் பணி நிமித்தமாக காலை 4:00 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வாசுதேவன் சென்றுள்ளார்.

அப்போது அவர் மீது காவல்துறை வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே வாசுதேவன் பலியானார். இந்த நிலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்படுத்தியதாக தூத்துக்குடி தென்பாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

விபத்து என நினைத்த குடும்பத்தினர் உடலை பெற்றுக் கொண்டு அடக்கம் செய்தனர். அதற்கு பின்பு தான் சாந்தி இதுகுறித்து விபத்து நடந்த இடத்தைப் பார்த்த போது, விபத்து நடந்ததற்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து காவல்துறைக்கு புகார் அளித்தார். ஆனால், முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சாந்தி. இந்த வழக்கு குறித்து விசாரிக்க வேண்டுமென தெரிவித்து சாந்தியை, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர்.

Also Read: “ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” - தலைமை பெண் காவலர் சாட்சியம்!

இதைத்தொடர்ந்து தென்பாகம் காவல் நிலையத்திற்கு சென்ற சாந்தியை தங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என தெரிவித்து, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணகுமார் உதவி ஆய்வாளர் காந்திமதி மற்றும் காவலர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் சாந்தி மீது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பொய் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர்.

தன்னை காவல்துறையினர் தாக்கியது குறித்து நீதிபதியிடம் சாந்தி புகார் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து பின்னர் சிறைக்கு அழைத்து செல்லுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சாந்தியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

ஜாமீனில் வெளிவந்த சாந்தி தற்போது தன்னை காவல்துறையினர் தாக்கியது குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது அண்ணன் வாசுதேவன் மர்ம மரணம் குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ் பென்னிக்ஸ் காவல்துறையால் தாக்கப்பட்டு பலியானதை தொடர்ந்து தற்போது ஏராளமானவர்கள் தங்களை காவல்துறையை தாக்கியதாக தெரிவித்து புகார் அளிக்கத் துவங்கியுள்ளனர். காவல்துறையின் கோர முகம் கிழ்ந்து பூதாகரமாகி வருகிறது. அடுத்தடுத்து வெளிவரும் உண்மைகள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- காதர்

Also Read: சாத்தான்குளம் எஸ்.ஐ.பாலகிருஷ்ணனும்... அவர் மீதான புகார்களும்... சமூக வலைதளங்களை சுற்றும் பதிவுகள்!