Tamilnadu

சாத்தான்குளம் கொலை: கேலி பேசிய குருமூர்த்தி; எடப்பாடி அரசின் அடிமை சாசனத்தால் வந்த வினை - உதயநிதி சாடல்!

உலகையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகனின் லாக்கப் மரணம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியின் துக்ளக் பத்திரிகையின் அட்டைப்படத்தில் கேலி சித்திரமாக வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, அப்பாவி இருவரின் கொலையை நகைச்சுவையாக அட்டைப்படமாக்கும் முடிகிறது எனில், உங்களின் தமிழர் விரோத துரோகத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது. இதுதான் பத்திரிகை தர்மமா என துக்ளக் வார இதழுக்கு தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் அப்பாவி இருவரை அடித்தேக் கொன்றுள்ளனர். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காடுகிறது. மக்கள் தன்னெழுச்சியாக போராடுகிறார்கள்.

இந்தச் சூழலிலும் இக்கொலையாக நகைச்சுவையாக அட்டைப்படமாக்க முடிகிறது என்றால் உங்களின் தமிழர் விரோத, துரோகத்தை புரிந்துக்கொள்ள முடிகிறது, இதுதான் பத்திரிகை தர்மமா என ஆடிட்டர் குருமூர்த்தியை வினவியுள்ளார்.

மேலும், நீயெல்லாம் ஆம்பளையா என்று கேட்டபோதே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்திருந்தால் இன்று ஒட்டுமொத்த தமிழக மக்களையும் பார்த்து ஆடிட்டர் குருமூர்த்தி கேலி பேசுவாரா?

உங்களின் கமிஷன், கலெக்‌ஷனுக்காக ஆடிட்டரே இந்த அரசு உங்கள் அடிமையென்று அடிமை சாசனம் எழுதிக்கொடுத்ததால் வந்த வினை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “சாத்தான்குளம் படுகொலை வழக்கில் தொடர்புடைய ஒருவரையும் விடக்கூடாது; அதுவே நீதி!”- உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!