Tamilnadu

தொடரும் அதிகார வன்முறை : “சாலையில் இளைஞர் மீது மஃப்டி போலிஸார் தாக்குதல்” - நெல்லையில் ‘பகீர்’ சம்பவம்!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை - மகன் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலிஸாரின் அதிகார அத்துமீறல்களுக்கும், வன்முறைக்கும் இரையாகியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே கொரோனா தடுப்பு பணி எனக் கூறிக்கொண்டு தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் போலிஸார் வரம்பு மீறி பொதுமக்கள் மீது அதிகார துஷ்பிரயோகங்களை செய்து வருகின்றனர். சாத்தான்குளம் கொலை நடந்து முடிந்த சில நாட்களிலேயே தென்காசியில் இளைஞர் போலிஸார் தாக்கியதால் சிறுநீரக செயலிழப்புக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

Also Read: தென்காசியில் ஒரு சாத்தான்குளம்: பூட்ஸ் காலால் உதைத்து துன்புறுத்திய போலிஸ்.. 25 வயது இளைஞர் பரிதாப மரணம்!

இதுபோல மாநிலத்தில் தொடர்ந்து போலிஸாரின் அதிகார அத்துமீறல்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் இளைஞர் ஒருவரை சீருடையில் இல்லாத காவல் உதவி ஆய்வாளர் பிரதாப் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது.

போலிஸாரின் இந்தத் தாக்குதல் திசையன்விளையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடந்துள்ளது. உதவி ஆய்வாளர் பிரதாப்புக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் இளைஞருக்கும் இடையே மதுக்கடையில் தகராறு ஏற்பட்டதே இந்தத் தாக்குதலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

அரசு வாகனமல்லாமல் வேறொரு காரில் வந்த உதவி ஆய்வாளர் பிரதாப் மற்றும் இதர போலிஸாரும் சேர்ந்து அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியுள்ளனர். சீருடையில் இல்லாத காரணத்தால் யாரென்றே தெரியாமல் அந்த இளைஞரும் பதிலுக்கு லேசாக தாக்குவதும் பதிவாகியுள்ளது. எவ்வித காரணமும் இன்றி ஒரு இளைஞரை 4 போலிஸார் பொதுவெளியில் தாக்கும் சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை மகன் கொலை - 5 போலிஸார் கைது; கொலை வழக்குப்பதிந்து CBCID அதிரடி!