Tamilnadu
"முத்தண்ணன் குளக்கரை பகுதி மக்களுக்கு நகர்ப் பகுதியிலேயே மாற்று இடம் வேண்டும்” - ஆட்சியரிடம் வேண்டுகோள்!
முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், நகர்ப் பகுதியிலேயே உரிய மாற்று இடம் கொடுக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்தை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் எனகோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ, கோவை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், "கோவை மாநகராட்சி, 21 வது வார்டு குமாரசாமி காலனி, முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில், கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக 3,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் உள்ள வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, கோவை மாநகராட்சி நிர்வாகம், இப்பகுதியில் உள்ள வீடுகளை இடிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இங்கு வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை காலி செய்வதற்கு இந்த அரசு முயல்கிறது.
எனவே முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடமாக, கோவையில் உள்ள உக்கடம் , கீரணத்தம், மலுமிச்சம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால் குடிசை மாற்று வாரியத்தால், மேற்கண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளில், தெருவிளக்குகள், மழைநீர் வடிகால் , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், மேலும் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகளில் வசிக்க இயலாது என்றும் கூறி முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை காலி செய்ய மறுத்து, போராடி வருகின்றனர்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற தி.மு.க ஆட்சியின் போது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் “குளக்கரை, சாலை ஆக்கிரமிப்பு , நீர்வழித் தடங்களில், அரசு புறம்போக்கு இடங்களில் வசிக்கக் கூடிய ஏழை – எளிய மக்களுக்கு , அவர்கள் வாழ்வதற்குரிய மாற்று ஏற்பாடுகளை செய்துவிட்டுதான், அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அரசாணை வெளியிட்டார்.
இதுகுறித்து கடந்த 26.11.2018 அன்று, கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் “முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ள வீடுகள் வெகு தொலைவில் இருப்பதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. தற்போது, வசித்து வரும் இடத்தின் அருகிலேயே அடுக்குமாடி குடியிருப்போ அல்லது தனி வீடுகள் கட்டித் தர வேண்டும் “ என்று நான் கோரிக்கை மனு அளித்திருந்தேன்.
மேலும், இப்பகுதி மக்களை அப்புறப்படுத்துவதைக் கண்டித்து, கடந்த 16.03.2020 அன்று பாப்பநாயக்கன்புதூர் பகுதிக் கழக செயலாளர் வ.ம.சண்முகசுந்தரம் தலைமையில் தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் அந்த பகுதி மக்கள் அனைவரும் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகமும் , மேற்படி மக்களின் குடியிருப்புகள் அகற்றுதல் நடவடிக்கையின் மீது பெறப்பட்டுள்ள மனுவின் அடிப்படையில், தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து (வழக்கு எண்: 5631/22-5-2020) வழக்கு நிலுவையில் உள்ளது.
மேலும், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்-சென்னை சார்பில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு, மேற்கண்ட மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்குதல் சம்பந்தமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தான ஆவணங்களுடன் வரும் 15 நாட்களுக்குள் கோப்புகளை அனுப்பக் கேட்டுள்ளது ( கோப்பு எண்: 6 / 48 / 2020. பதிவு செய்த தேதி: 18/06/2020)
ஆனால், இந்த பேரிடர் காலத்தில், முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தாமல், சிறிது கூட மனசாட்சி இல்லாமல் , இப்பகுதிகளில் உள்ள வீடுகளை இடிக்கும் பணியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
ஆகவே , கடந்த 100 ஆண்டுகளாக, முத்தண்ணன் குளக்கரை பகுதிகளில் வசிக்கும் ஏழை - எளிய மக்களுடன் கலந்து பேசி, அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், நகரப் பகுதியிலேயே உரிய மாற்று இடம் கொடுக்கப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்தை இந்த அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!