Tamilnadu

“தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி 4 பேர் பலி” - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும்போது ஏற்பட்ட சோகம்!

தூத்துக்குடி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள செக்காரக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் சோமசுந்தரம். இவரது வீட்டில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இக்கிராஜா (17), பாலா (20), பாண்டி (28) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த தினேஷ் (20) ஆகிய 4 பேரும் இன்று சென்றுள்ளனர்.

முதலில் கழிவு நீரை மோட்டார் மூலம் வெளியேற்றிவிட்டு, இசக்கிராஜாவும், பாண்டியும் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் இருவரும் வெளியே வராததால், பாலாவும், தினேஷும் உள்ளே இறங்கியுள்ளனர். அவர்களும் நீண்ட நேரமாக வெளியே வரவில்லை.

இதையடுத்து வீட்டின் உரிமையாளர் சோமசுந்தரம் சிப்காட் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பான முறையில் தொட்டிக்குள் இறங்கிப் பார்த்தபோது விஷவாயு தாக்கி 4 பேரும் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.

File image

இதையடுத்து 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து தட்டாபாறை போலிஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும்போது உயிரிழப்பு நிகழ்வது தொடர்ந்து வரும் நிலையில், அரசு இப்பிரச்னைக்கு தீர்வுகாணாமல் அப்பாவி மக்களைக் காவு கொடுத்து வருவது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "மீண்டும் ஒரு சிறுமி பாலியல் வன்கொலை : இந்தக் கொடூரங்களுக்கு முடிவுகட்ட வேண்டும்” - மு.க.ஸ்டாலின் வேதனை!