Tamilnadu
“கொரோனா பாசிட்டிவ் - நெகட்டிவ் குளறுபடியால் பலியான பெண்” : சுகாதாரத்துறை அலட்சியத்தால் நேர்ந்த கொடுமை!
சென்னை மாநகராட்சி சுகாதார ஊழியர்களின் அலட்சியத்தால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மடிப்பாக்கம் பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் சுலோசனா மேரி (47). கடந்த 25ந் தேதி இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவரை மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் காரப்பக்கம் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமிற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பின்னர் தொற்று இல்லை என்று கூறி ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
அப்போதே சுலோசனா மேரி மிகுந்த சோர்வுடன் இருந்துள்ளார். இரண்டு நாட்களில் காய்ச்சல் அதிகமாகி உடல்நிலை மோசமடைந்துள்ளது. பின்னர் மூச்சு விட சிரமப்பட்டுள்ளார்.
எனவே, மீண்டும் பரிசோதிக்குமாறு சுகாதாரத்துறை ஊழியர்களிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். நாளை தான் வர முடியும் என ஊழியர்கள் அலட்சியமாகப் பேசியதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை உள்ளே அனுமதிக்காமல் மருந்து மட்டும் எழுதி கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஜூலை 1ம் தேதி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் சுகாதாரத்துறையினரிடம் வாக்குவாதம் செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வியாழனன்று (ஜூலை 2) அதிகாலை சுலோசனா மேரி உயிரிழந்தார்.
நுரையீரல் மற்றும் இதயத்தில் தொற்று பாதிப்பு தீவிரமாகி இருந்ததுதான் அவரது இறப்பிற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
களப்பணி ஊழியர்கள் முதல் மண்டல அதிகாரிகள் வரை 5 நாட்களாக உறவினர்கள் பேசியும் உரிய நடவடிக்கை எடுக்காததே இந்த உயிரிழப்புக்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களை முறையாக கவனிக்காமல் மாநகராட்சி நிர்வாகம் மெத்தமாகச் செயல்படுவதாகவும், அரசின் மெத்தனமே சுலோசனா மேரியின் உயிரைப் பறித்துவிட்டதாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் தெரிவித்தபிறகு புகாராக பதியப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி பல்லாயிரக் கணக்கானோரை கண்காணிப்பதால் சில தவறுகள் ஏற்படுவதாக மருத்துவ அதிகாரிகள் உறவினரிடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?