Tamilnadu

கூடலூரில் போலிஸார் திட்டியதால் லாரி ஓட்டுநர் தீக்குளிப்பு: போதையில் வந்ததாக வழக்கை திசை திருப்பிய காவலர்!

கூடலூர் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் கூடலூர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் தியாகராஜா (52) என்பவர் நந்தட்டி பகுதி வழியாக கூடலூரை நோக்கி லாரியை ஓட்டி வந்துள்ளார். அப்போது லாரி ஆட்டோ ஒன்றில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் லாரி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த உதவி காவல் ஆய்வாளர் மணிதுரை இது தொடர்பாக விசாரித்தபோது ஆவணங்களை எடுக்க லாரிக்குள் ஏறிய ஓட்டுநர் தியாகராஜா திடீரென லாரியின் உள்ளே தன் மீது மண்ணெண்னெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை தடுத்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் உடலில் 45% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொன்டு செல்லப்பட்டார். சம்பவம் குறித்து கூடலூர் டி.எஸ்.பி தலைைமையில் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கூடலூர் ஆர்.டி.ஓ ராஜ்குமாரும் பாதிக்கப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியுள்ளார். தன்னை எஸ்.ஐ மணிதுரை தகாத வார்த்தைகளால் தொடர்ந்து திட்டியதால் மனமுடைந்து தீ வைத்துக் கொண்டதாக ஓட்டுநர் தியாகராஜா தெரிவித்ததாக கூறிய லாரி ஓட்டுநர்கள், காவல் துறையினர் லாரி ஓட்டுநர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், தேவையற்ற அபராதம் விதிப்பதும் தொடர்ந்து வருகின்றது என்றும், இதனால் கொரோனா ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் ஓட்டுநர்கள் இது போன்ற முடிவுகளுக்கு வந்து விடுவதாகவும், போலிசாரின் கெடுபிடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட லாரி ஓட்டுநர் போதையில் விபத்து ஏற்படுத்தியதாகவும், விசாரணைக்கு சென்ற எஸ்.ஐ ஆவணங்களை கேட்ட போது அவர் எதிர்பாராத விதமாக தீ வைத்துக் கொண்டதாகவும், தொடர் விசாரணையில் சரியான தகவல் தெரிய வரும் என போலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் காவல்துறை தாக்கியதில் வியாபாரிகள் இறந்த சம்பவம் பரபரப்பான விசாரணையில் உள்ள நிலையில், கூடலூரில் காவல் துறையினர் திட்டியதாக கூறி லாரி ஓட்டுனர் தீ வைத்துக்கொண்ட சம்பவம் மேலும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இதனால் காவல் துறையினர் மீதான நன்மதிப்பு மக்களிடையே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது. போலிஸாரின் அதிகார அத்துமீறல்களுக்கு காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளான.

Also Read: “ஜெயராஜ், பென்னிக்ஸை விடிய விடிய லத்தியால் அடித்த சாத்தான்குளம் போலிஸ்” - தலைமை பெண் காவலர் சாட்சியம்!