Tamilnadu

சென்னை மக்களை குளிர்விக்க வருகிறது மிதமான மழை.. வட கடலோர பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் - வானிலை அப்டேட்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தருமபுரி, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சம் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 19 செ.மீ, சின்கோனாவில் 14 செ.மீ, வால்பாறையில் 13 செ.மீ, புதுக்கோட்டை, திருவாரூர் குடவாசல் தலா 9 செ.மீ, தேனி வைகை அணையில் 8 செ.மீ, திருப்பத்தூர் ஆம்பூரில் 7 செ.மீ, திருவாரூர் வலங்கைமான், நீலகிரி தேவலா, புதுக்கோட்டை பெருங்கலூர், திண்டுக்கல் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்றும் நாளையும் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல, அடுத்த 48 மணி நேரத்திற்கு வடக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள குஜராத் கடல் பகுதியில், மத்திய கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள மகாராஷ்டிரா கடல் பகுதியில், தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டியுள்ள கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், வரும் ஜூலை 3 மற்றும் 4ம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இன்றில் இருந்து ஜூலை நான்காம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: “சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது” - மு.க.ஸ்டாலின் சாடல்!