Tamilnadu
சாத்தான்குளம் கொலை: போலிஸார் மீது கொலை வழக்குப்பதியலாம் - சிபிசிஐடிக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்!
சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், நீதித்துறை நடுவருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதற்காக தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிராதபன் ஆகியோரை இன்று நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதித்துறை நடுவரை ஒருமையில், மரியாதைக் குறைவாக, ஏளனமாக பேசியதாக காவலர் பிரபாகரனையும் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர். மூவர் மீதும் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்காக தாக்கல் செய்தது.
நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மூவரும் நேரில் ஆஜராகினர். நீதிமன்ற அறிவுறுத்தலின் படி, நெல்லை சரக ஐஜி பிரவீன் குமார் மற்றும் தூத்துக்குடி எஸ்.பி அருண் பாலகோபாலன் ஆகியோர் அரசு வழக்கறிஞருடன் இருந்தனர்.
அரசுத்தரப்பில் நீதித்துறை நடுவரின் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்காத ASPகுமார் மற்றும் DSP பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மரியாதைக்குறைவாக பேசிய காவலர் பிரபாகரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்த 24 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.
நீதிபதிகள், நீதித்துறை நடுவரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் மீதான நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை தொடரும். தனித்தனியே வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளலாம் என தெரிவித்தனர். அரசுத்தரப்பில் அவர்கள் செய்தது தவறு இருப்பினும், அதிக மன அழுத்தம் காரணமாகவே நிகழ்வு நடைபெற்றுள்ளது என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், நீதித்துறை நடுவர் தான் விசாரிக்கிறார் என்பது தெரியுமா? தெரிந்தும் ஏன் இவ்வாறு பிரச்சனையை பெரிதுபடுத்தும் விதமாகவே நடந்து கொண்டனர் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, மூவர் தரப்பிலும் வழக்கறிஞர்களை நியமிக்க உத்தரவிட்டு 4 வாரங்கள் அவகாசம் அளித்து, இது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர் .
தொடர்ந்து சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? என கேள்வி எழுப்பினர். சிபிஐ பலவித அனுமதிகளைப் பெற்று விசாரணை தொடங்குவதற்குள் தடயங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அனைத்து காவல்துறையினரும் மோசமானவர்கள் அல்ல. ஒரு சிலரின் நடவடிக்கைகளால் இது போன்ற பிம்பம் ஏற்பட்டுவிடுகிறது என தெரிவித்த நீதிபதிகள் முதல்நிலை பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது.
அதனடிப்படையில் அதிக காயங்கள் இருப்பதும், வழக்குப்பதிவு செய்யவும் முகாந்திரம் உள்ளது. நீதித்துறை நடுவரின் அறிக்கையில் காவலர் ரேவதி சாட்சி அளிக்கையில் மிகவும் அச்சமடைந்து காணப்பட்டுள்ளார். ஆகவே அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை நீதிமன்றம் தாமதத்தை விரும்பவில்லை.பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் நீதியை எதிர்நோக்கி காத்துள்ளனர். ஆகவே, ஒரு நொடி கூட வீணாகக்கூடாது. ஆகவே, சிபிஐ வசம் ஒப்படைக்கபப்டும் வரை நெல்லை சரக ஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா? அல்லது நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கு விசாரணையை கையில் எடுக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையடுத்து கூடிய நீதிமன்ற அமர்வு, சாத்தான்குளம் காவல் நிலைய சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி மாஜிஸ்திரேட் மற்றும் பிரேதப்பரிசோதனையின் அடிப்படையில் கொலை கொலை வழக்குப்பதிவு செய்யலாம் என்றும் சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி அணில் குமார் விசாரணை நடத்தலாம் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!