Tamilnadu
தென்காசியில் ஒரு சாத்தான்குளம்: பூட்ஸ் காலால் உதைத்து துன்புறுத்திய போலிஸ்.. 25 வயது இளைஞர் பரிதாப மரணம்!
கொரோனா ஊரடங்கு நேரத்தில் சாமானிய மக்கள் மீதான தமிழக போலிஸாரின் அத்துமீறல்கள் பெரும் கலக்கத்தையும், காவல்துறை மீதான நம்பிக்கையையும் இழக்கும் வகையில் அமைகிறது. அண்மையில் தூத்துக்குடி சாத்தான்குளத்தில் அப்பாவி தந்தை மகனை அவசியமின்றி கைது செய்து சித்ரவதைபடுத்தி மாவட்ட காவல் ஆய்வாளரும், இதர போலிஸாரும் அவர்களை மரணிக்க வைத்த சம்பவம் மாநிலம் தாண்டி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு, இதே போன்று போலிஸாரின் மிரட்டலுக்கும், அதிகார அத்துமிறலுக்கும் ஆளானவர்கள் குறித்த விவரங்களும் பதிவிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் போலிஸார் அடித்து சித்ரவதை செய்ததால் 25 வயது இளைஞர் ஒருவர் மரணித்துள்ள சம்பவம் குறித்து பதிவுகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஹைஸ்கூல் தெருவைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனின் மகன் 25 வயது குமரேசன். குமரேசன் மீது செந்தில் என்பவர் கொடுத்த இடப்பிரச்சனை சம்பந்தமான புகாரின் பேரில் கடந்த மே 8ம் தேதியன்று போலிசாரின் விசாரணைக்கு சென்ற குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் கன்னத்தில் அடித்து அனுப்பி விட்டார்.
மீண்டும் மே 10ம் தேதியன்று விசாரணைக்கு குமரேசனை காவல்நிலையத்துக்கு வரச்சொல்லிய காரணத்தால் குமரேசனும் வீகேபுதூர் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். அங்கு, குமரேசனை உதவி ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் குமார் என்கிற போலிஸும் இணைந்து மிகக்கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள். பூட்ஸ் காலால் வயிறு , முதுகு பகுதியில் மிதித்துள்ளனர்.
இரு கால்களையும் நீட்டச் சொல்லி அதன் மீது இருவரும் பூட்ஸ் காலால் ஏறி நின்றுள்ளனர். முதுகில் கையால் மாறி மாறி குத்தியுள்ளார். லத்தியால் முதுகில் அடித்து சித்ரவதை செய்துள்ளனர். இதை வெளியில் சொல்லக்கூடாது என்றும், சொன்னால் பொய் கேஸ் போடுவோம். உன் அப்பனையும் அடிப்போம் என்றும் மிரட்டி உள்ளனர்.
இதனால் பயந்து போன குமரேசன் சம்பவத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதியன்று குமரேசன் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சுரண்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து ஜூன் 12ம் தேதியன்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மருத்துவமனையில் மருத்துவர் கேட்ட பிறகே குமரேசன் தனக்கு நடந்த கொடுமைகளை குமரேசன் கூறியுள்ளார். கல்லீரலும், கிட்னியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் குமரேசனின் தந்தையிடம் கூறியுள்ளார். இதன் பேரில் தென்காசி காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதிகாரிகளுக்கு குமரேசனின் தந்தை புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் ஆய்வாளர் ஒருவரை விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாக எஸ்பி தெரிவித்தார். இந்நிலையில் 16 நாட்களாக நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமரேசன் நேற்று (ஜூன் 27) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காவல்துறையின் கடும் சித்ரவதையால் சாத்தான்குளத்தில் இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து குமரேசனின் மரணமும் காவல்துறையின் மிருகத்தனமும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!