Tamilnadu

‘உயிரைப் பணயம் வைத்து களத்தில் நிற்பவர்களுக்கும் இவர்களால் களங்கம்’ - காவல்துறை அதிகாரிகள் வருத்தம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைச் சிறையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலிஸார் காட்டுமிராண்டித்தனமாக அடித்து கொலை செய்தனர்.

இந்த இருவரின் மரணத்திற்கு காவல்துறையினர் தான் காரணம் என்று கூறி காவல்துறையை கண்டித்து, உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல் ‌கட்சியினர் மற்றும் வணிகர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலிஸாரின் இத்தகைய குற்றத்தை காவல்துறை உயர் அதிகாரிகளே கண்டித்துள்ளனர்.

இதுதொடர்பாக, நெல்லை மாநகர காவல் துறை துணை ஆணையாளர் சரவணன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்...

“மாற்றம் ஒன்றே மாறாதது..!!

என்ன சொல்லி தேற்ற முடியும்.

இது என்றும் ஆறாத வடு.

இது என்றும் அழியாத கறை.

மன்னிக்க முடியாத குற்றம்.

மன்னிக்கவே கூடாத குற்றம்.

நடந்திருக்க கூடாத குற்றம்.

இனி நடக்கக்கூடாத குற்றம்.

கண்ட கனவுகள் நொறுங்கியது.

கட்டிய கோட்டைகள் தகர்ந்தது.

இழப்பதற்கு இனி எதுவுமில்லை. ஆனால்,

அடைவதற்கு இரு லட்சியம்

இருக்கிறது.

இதுவே இறுதி, அது உறுதி

பத்தாயிரம் மைல் பயணங்கள் முதல் அடியிலிருந்து துவங்குறது.

நான் விரும்பும் மாற்றம்

என்னிடமிருந்து துவங்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து அவரின் இந்த கருத்தை பகிர்ந்து பண்ருட்டி இன்ஸ்பெக்டர் அம்பேத்கர்,“ரௌடிக்கோ ஒரு கொள்ளையனுக்கோ ஒரு கொலைகாரனுக்கோ இந்நிலை ஏற்பட்டிருந்தால் கூட ஓரளவு நியாயமாக நினைத்திருப்பேன்.

மறக்கவும் மறுக்கவும் முடியாத இழப்பு,என்னுடைய ஆதங்கம் ஆற்றாமை கோபம் இயலாமை அனைத்திற்கும் வரிகளாக்கி கவிதையாக ஏற்கனவே தந்துள்ளார்கள். மதிப்பிற்குரிய டி.சி திரு.சரவணன் சார் அவர்கள்.

எத்தனை பெரிய பெரிய உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை காவலர்கள் சகோதரர்கள் வரை தங்களது பாதுகாப்பினைப்பற்றிக்கூட சிறிதும் அச்சப்படாமல் மக்களுக்காக களத்தில் இறங்கி பணி செய்தார்கள்.

அவ்வளவையும் சில கருப்புகளால் களையப்பட்டுவிட்டது. மீண்டும் மீண்டும் வேதாளம்- விக்கிரமாதித்தன் போலதான் காவல்துறைக்கான அங்கீகாரம் மக்களிடையே மடைமாற்றப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார். காவல்துறை உயர் அதிகாரிகளின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது..

Also Read: போலிஸால் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு தி.மு.க ரூ.25 லட்சம் நிதியுதவி!