Tamilnadu

ரூ.2000 கமிஷன்..ட்ராவல்ஸ் பேக்கேஜ்.. ஊரடங்கில் E-Passஐ வைத்து கல்லாகட்டிய அரசு ஊழியர்கள் உட்பட ஐவர் கைது!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ தேவைக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களுக்கு மட்டுமே உரிய ஆவணங்களுடம் தமிழக அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது.

இருப்பினும், அதிக தொற்று பாதிப்பை கொண்டுள்ள சென்னையில் இருந்து செல்ல முற்படுவோருக்கு எளிதில் இ-பாஸ் அனுமதி வழங்க மறுத்து வருகிறது மற்ற மாவட்ட நிர்வாகங்கள்.

இதனால் போலி இ பாஸ்களுடன் சொந்த ஊருக்கு செல்லும் நிகழ்வும் நடந்தேறி வருகிறது. ஏனெனில், வாழ்வாதாரம் இல்லததால் வேறு வழியின்றி சொந்த ஊருக்கு செல்ல எத்தனித்து வருகிறார்கள். இந்த நிலையில், பிற மாவட்டங்களில் அனுமதி கொடுக்கப்படாததால், சென்னைக்கு வருவது போன்று சட்ட விரோதமாக இ-பாஸ் தயாரித்து பேக்கேஜ் முறையில் ட்ராவல்ஸ் கார்கள் மூலம் நூற்றுக்கணக்கானோரை வெளி மாவட்டங்களுக்கு கும்பல் ஒன்று அனுப்பியுள்ளது.

இந்த சட்டவிரோத செயல்களுக்கு மாநகராட்சி மூத்த வருவாய் ஆய்வாளரும், இ-பாஸ் வழங்கும் அதிகாரியாக உள்ள குமரன் என்பருமே உடந்தையாக இருந்திருக்கிறார்கள். இதையடுத்து சைபர் க்ரைம் உதவியுடன் சென்னையில் இருந்து செல்வதற்கு இ-பாஸ் வேண்டும் என அந்த கும்பலிடம் போலிஸார் கேட்டுள்ளனர். அப்போது, கும்பலில் ஒருவரான மனோஜ் குமார் என்பவர் 2000 ரூபாய் கமிஷன், காருக்கான பேக்கேஜ் என பேரம் பேசியிருக்கிறார்.

உடனடியாக அந்த மனோஜ் குமாரின் இருப்பிடத்தை அறிந்த போலிஸார் விரைந்து சென்று கைது செய்ததோடு, அவரது கூட்டாளிகளான இரு ட்ராவல்ஸ் கார் ஓட்டுநர்கள் வினோத் குமார் மற்றும் தேவேந்திரனையும் பிடித்துள்ளனர். மூவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவி பொறியாளர் உதயக்குமார், வருவாய் ஆய்வாளர் குமரன் ஆகிய இருவரும் மூளையாக இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து இருவரையும் போலிஸார் கைது செய்தள்ளனர்.

இந்த ஐவரும் கடந்த ஒரு மாத காலமாக சட்டவிரோதமாக சென்னையில் இருந்து மக்களை சொந்த ஊருக்கு செல்வோருக்கு கமிஷன் முறையில் இ பாஸ் வழங்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து ஐவர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர் போலிஸார். பின்னர், வருகிற 8ம் தேதி வரையில் சிறையில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தர்விட்டுள்ளது.

Also Read: கொரோனா காலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளில் தொடரும் முறைகேடுகள்: நடுவரை நியமிக்காதது ஏன்?- ஐகோர்ட் கேள்வி!