Tamilnadu

தென்மேற்கு பருவக்காற்று தீவிரம் : அடுத்த 2 நாட்களுக்கு ‘சில்லென்ற’ தமிழகம்... வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், அடுத்த 48 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சோலையார் மற்றும் வால்பாறையில் 6செ.மீ மழையும், சின்கோனா மற்றும் சின்னகல்லாரில் 5 செ.மீ மழையும் , நீலகிரி மாவட்டம் தோவாலாவில் 4செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், கர்நாடகா கேரளா கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டிய குஜராத் கடலோர பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் அந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: தீவிரமடையும் தென்மேற்கு பருவக்காற்று : 11 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை கொட்டும் - வானிலை மையம் தகவல்!