Tamilnadu

வடதமிழகத்தில் சூறாவளி காற்று வீசும்.. 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - சென்னையின் நிலை என்ன?

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தர்மபுரி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, வட தமிழகம் காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேச்சமயத்தில் வெப்பநிலையானது அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 4 செ.மீட்டர் மழையும், சிவகங்கை, நாமக்கல் புதுச்சத்திரம், விழுப்புரம் வல்லம் ஆகிய பகுதிகளில் தலா 2 செ.மீட்டர் மழையும், நாமக்கல் செந்தமங்கலம், விழுப்புரம் செஞ்சி, தஞ்சாவூர் திருவையாறு, அரியலூர் செந்துறை, கோயம்புத்தூர் சோலையார் பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் குமரிக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், மேலும் வட தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்று விசு கூடும் என்பதால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Also Read: “சாதி,சமயமற்ற சமத்துவபுரம் சென்னை;அதன் மக்களை நோயிடமிருந்து காக்கவேண்டியது அரசின் கடமை”- உதயநிதி அட்வைஸ்!