Tamilnadu
“கடவுளுக்குத்தான் தெரியுமாம்” - அரசின் கையாளாகாத்தனத்தை வெளிப்படுத்திப் பேசிய முதல்வர் எடப்பாடி!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது.
இதனைத் தடுக்க மாவட்ட அளவில், மாநில அளவில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் ஆனால் தடுப்பு பணியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலையீடுதான் அதிகமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்கவே ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. அதனால் அரசுக்கு மக்களும், அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதல்வர், கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்கு தான் தெரியும் என பதில் அளித்தார். முதல்வரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசவேண்டிய முதல்வர், என்னால் முடிந்தது அவ்வளவுதான்; கடவுள் தான் இனி காப்பாற்ற வேண்டும் என்கிற ரீதியில் பேசியிருப்பது அரசின் தோல்வியைக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “லட்சக்கணக்கான மக்கள் வசிக்கும் சென்னையில் இதுவரை சில லட்ச மாதிரிகளே பரிசோதிக்கப்பட்டுள்ளன. பரவலாகப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் தான் தொற்று உள்ளவர்களை விரைந்து கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கமுடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதனைக்கூட இந்த அரசு பரிசீலனை செய்யவில்லை.
களப்பணியாளர்களில் பலர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவதும் பலியாவதும் தொடர்கிறது. அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசே செய்து கொடுத்தால்தான் நோய்த்தொற்று பரவலை பெருமளவு தடுக்க முடியும்.
ஆனால் அதனை செய்யாமால் கொரோனா தொற்று எப்போது தீரும் என்றால், கடவுளுக்குதான் தெரியும் என்று சொல்வதற்கு முதல்வர் எதற்கு? தனது பொறுப்பை உணர்ந்து முதல்வர் பேசவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!