Tamilnadu

அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் ஆலோசனை கூட்டத்தில் இருந்த வேலுமணி பரிசோதனை செய்தாரா?: தி.மு.க எம்.எல்.ஏ கேள்வி

17.06.2020 அன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் குழுவில் இருந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டாரா ? ஆனால் இன்று கோவையில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது சரிதானா? மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய , சமுதாயப் பொறுப்பு மிக்க அமைச்சரே, இப்படி சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடுவது போல் செயல்படுவது சரியா? என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டு அறிக்கையில், “நேற்று முன்தினம் 17.06.2020 அன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் குழுவில் இருந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை . ஆனால் இன்று கோவையில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது சரிதானா?

மேலும் , கடந்த ஒரு மாதமாக , கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலே பந்தயசாலை, பேரூர், குறிச்சி குளம், ஆலாந்துறை, சூலூர், இருகூர் ஆகிய பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், போதிய பாதுகாப்பு கவசங்கள் இல்லாமலும், அரசு அதிகாரிகள், நூற்றுக்கணக்கான அ.தி.மு.க கட்சியினர் உள்ளிட்டவர்கள் கூட்டமாக, ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு அரசு அறிவித்த “சமூக இடைவெளி” வேண்டும் என்ற அறிவிப்பை சிறுதும் பொருட்படுத்தாமல், மேற்கண்ட நிகழ்சிகளில் பங்கேற்றுக் கொண்டு இருந்ததை பல நாளிதழ்களிலும், சமூக வலை தளங்களிலும் வந்துள்ளது.

மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்களில் நூற்றுக்கணக்கான அ.தி.மு.க கட்சியினர் சூழ அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வந்து பங்கேற்கிறார். இதைக் கண்டு , கொரோனா தொற்று சமூகப் பரவலுக்கு ஆளும் கட்சி நிகழ்ச்சிகளே காரணம் ஆகிவிடுமோ, என்று பொது மக்கள் அச்சம் கொள்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன

ஏனெனில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தி கொண்ட இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளே, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாமல் திணறிப்போய், இப்போது நிலைமை கைமீறிப் போய்விட்டிருக்கிறது. கூட்டம்தான், கொரோனா தன் கச்சேரியை நடத்துமிடம். இவ்வளவு பெரிய மக்கள்தொகையை வைத்துக்கொண்டு எந்த அளவுக்கு தனிமனித இடைவெளியை நாம் கடைப்பிடிக்கிறோமோ அந்த அளவுக்கு கரோனாவை நாம் வெற்றிகொள்ளலாம். ஆனால் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய , சமுதாயப் பொறுப்பு மிக்க அமைச்சரே, இப்படி சமூக இடைவெளியை காற்றில் பறக்க விடுவது போல் செயல்படுவது சரியா என்று மக்கள் கேட்கின்றனர்.

தற்பொழுது ஒரு நெருக்கடிநிலை மூண்டு விட்டிருப்பது பற்றிய எண்ணமே அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. இந்த பேரிடர் காலத்து , அசாதாரண சூழலிலும் கூட அமைச்சர் என்ற முறையிலே, கோவையில் உள்ள மக்களுக்காக கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக எந்த ஒரு ஆக்கப்பூர்வமான பணிகளையும் செய்யாமல், வீட்டு வாடகை, மின் கட்டணம், வரி மற்றும் மாத கடன் தவணைகள் செலுத்த முடியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கும் சூழலில், அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் , அவர்களுக்கு என்ன உதவிகள் செய்யலாம் என்ற ஆலோசனை இல்லாமல், கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், அதிமுகவினரும் புதிய டெண்டர்களை பினாமிகளுக்கு ஒதுக்கி , பூமி பூஜை , ஆற்றை தூர் வாருவது போன்ற புதிய ஒப்பந்த பணிகளை துவக்குவதில் மட்டும் உள்ள உள்நோக்கம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.

ஏற்கனவே , கோவையில் கொரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி, மக்களிடையே ஏற்படுத்திவரும் பாதிப்பும் - இழப்பும், அச்சம் தருவதாக உள்ளது. இந்த நிலையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிமுக வினரின் சமூக இடைவெளி பின்பற்றாத பொறுப்பற்ற செயல்களால் நோய்த் தொற்று கடுமையாக பரவும் அபாயம் உள்ளது.

ஆகவே அமைச்சர் என்ற முறையிலே, மேற்கண்ட சமூக இடைவெளி இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தும் செயல்களைத் தவிர்த்து , கோவையில் உள்ள மக்களுக்காக, கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்கு , உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: 11 எம்.எல்.ஏ விவகாரத்தில் EPS-OPS இருவரின் நடிப்பும் அபாரம்; அ.தி.மு.க அரசின் அவலநிலையை காட்டும் கட்டுரை!