Tamilnadu

“நிபுணர்களின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்துவதே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம்” - கி. வீரமணி குற்றச்சாட்டு!

கொரோனா தொற்று நாளும் அபாயகரமாக அதிகரித்து வருகிறது; மத்திய அரசும் சரி, தமிழ்நாடு அரசும் சரி மற்றவர்கள், நிபுணர்கள் கூறும் கருத்துகளைப் போதிய அளவில் கவனத்தில் கொண்டு செயல்படாமையும், இந்நிலைக்கு முக்கிய காரணமே! அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது - நம் நன்மைக்கே என்பதை உணர்ந்து, பொது மக்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு :

"கொரோனா கொடூரம் நாளுக்கு நாள் பாய்ச்சலாக மாறி, மரணங்கள் அதிகமாகி வருவது கண்டு மக்களின் அச்சம் உச்சத்திற்குச் செல்லும் வேதனையான நிலை! பிரதமர் மோடி கூறிய பல உத்திகள்- கைதட்டலாலோ அல்லது விளக்கேற்றியதாலோ வைரஸ் கிருமிகளை விரட்டுவதில் அவர்கள் எதிர்பார்த்த எந்தப் பலனும் கிட்டவில்லை.

அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் பிரதமர் மோடிக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்ட ஆக்கப்பூர்வமான யோசனைகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்பட்டன என்பது விடை காண முடியாத வினாவாகவே இருக்கிறது!

அந்த நிபுணர்கள் அரசியல்வாதிகளோ அல்லது எதிர்க்கட்சியினரோ அல்லர். பின் ஏன் அவர்களது ஆலோசனைகள் எடுத்துக் கொள்ளப்பட்டு செயல்படுத்தப்படவில்லை என்பதே நாட்டு மக்களில் விவரம் தெரிந்தோர் எழுப்பும் கேள்வி.

உலக நாடுகளில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மரணங்கள் - பலிகள் சதவிகித எண்ணிக்கை நம் நாட்டில் மிகவும் குறைவு என்று ஒரு சமாதானம் - விளக்கம் சரியானதா? நியாயமானதா? கொரோனா தொற்றை எதிர்த்து போராடுவது என்பது கண்ணுக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் நடத்திடும் போர் என்று சொல்லும்போது, அனைவரது ஒத்துழைப்பும் இதில் தொடக்கத்திலிருந்தே கோரப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கவேண்டும்.

பிரதமர் மோடிக்கு எழுதிய மருத்துவ அனுபவஸ்தர்களின் கடிதத்தின் ஆலோசனைகளை ஏற்காமல், அவரது அலுவலகத்தைச் சார்ந்த அரசியல் ரீதியான, நிர்வாக ரீதியான குழுவை மட்டுமே கலந்தாலோசித்ததே இந்த பின்னடைவுகளுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும். மற்ற குறிப்பாக மருத்துவ நிர்வாகத்தில் சிறப்பு பெற்றவர்களை மேலும் கலந்திருக்கவேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் எழுதியிருந்தனர். இன்றுவரை அது கடைப்பிடிக்கப்பட்டதாகவே தெரியவில்லை.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி நிதி என்பதைக்கூட அறவே அவர்களிடமிருந்து பறித்துவிட்டதனால், அந்தந்த மாநிலங்களில் அந்தந்த தொகுதி, மருத்துவமனை சிகிச்சைக்கான முறைகளை பரவலாக்கிடும் தன்மைகளில் உதவிட முடியாத இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது.

தொற்று (Epidemic) என்பதால் இதை எளிதில் பரவாமல் தடுப்பது அவ்வளவு சாதாரணமானதல்ல. மிகவும் கடினமான - மலையேறும் பணி போன்றதுதான்; ஆனால், மரண விகிதங்களை வெகுவாகக் குறைக்க வழி ஏற்படுத்திட வேண்டும்; குணமாகிறவர்கள் எண்ணிக்கை சற்று ஆறுதலைத் தருகிறது!

கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 15, 30 ஆகிய நாட்களில் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட போதே, தொற்று 20 மடங்கு கூடுதலானதால், யுத்தக்களத்தில் எப்படி போர் முறைகளை ஆய்வு செய்து அவ்வப்போது மாற்றி எதிரியை எதிர்கொள்கிறார்களோ அந்த முறையைக் கையாளவேண்டும்; அது செய்யப்படவில்லை என்பதுதான் அந்த மருத்துவர்கள், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தின் முக்கிய சாரம்.

மாநிலங்களை முதன்மைப்படுத்தி அவர்களுக்குத் தாராளமாக நிதி உதவி வழங்கி, இந்த தேசியப் பேரிடரைச் சமாளிக்கவேண்டியதன் அவசியம்பற்றி சிந்தித்திருந்தால், அள்ளித்தர வேண்டிய நிதி உதவியை கிள்ளித்தரும் நிலைமை ஏற்பட்டிருக்குமா? மாநிலங்களுக்குத் தரவேண்டிய நிலுவைத் தொகைகூட(ஜி.எஸ்.டி. நிலுவை) மார்ச் மாதத் தொகையே இப்போதுதான் வழங்கப் போவதாகச் செய்திகள் வருகின்றன!

மத்திய அரசின் இந்த நிலை ஒரு பக்கம் - மாநில அரசு குறிப்பாக, தமிழ்நாடு அரசும், முதலமைச்சரும், சில அமைச்சர்களும், அனைத்துக் கட்சிகளையும், அமைப்புகளையும் ஆரம்பத்திலேயே அழைத்து, கலந்தாலோசித்து களத்தில் கூட்டாக இறங்கியிருந்தால், நிலைமை பெரும் அளவுக்கு மாறியிருக்கக் கூடும்.

சட்டமன்ற உறுப்பினர்கள், ஏன் முதல்வரின் உதவியாளர் போன்றவர்களுக்கே இந்த ஆபத்து - தொற்று உயிர்ப் பலி வரை கொண்டு சென்றுள்ளது. இந்த நிலை மனிதநேய அடிப்படையில் மிகவும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் உரியது!

எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், அவரது கடமையை - பொறுப்புள்ள ஜனநாயகத்தில் எப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டி செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறார்; அதை ‘அரசியல் செய்கிறார்’ என்று அவரை சில அமைச்சர்களைவிட்டு தரக்குறைவாக விமர்சிப்பது இந்த நேரத்தில் தேவையா? ஆட்சியாளர்களுக்கு எதிர்விளைவைத்தானே உண்டாக்கும் என்பது அவர்களுக்குப் புரியவேண்டாமா?

மத்திய - மாநில அரசுகளுக்கு ஒத்துழைப்பு தரவேண்டிய அத்துணை அம்சங்களில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் சரி, மற்ற அமைப்பின் பொறுப்பாளர்களும் சரி, யாரும் பின்வாங்கவோ, எதிர்மறைப் பேச்சோ இதுவரை பேசவில்லை. அவர்களும் கொரோனா ஒழிப்பில் தங்கள் பங்களிப்பை பொறுப்புடன் செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தங்களால் முடிந்த அளவிற்கு நலப்பணிகளின் மூலம் உதவுகிறார்கள்.

குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்; நல்ல அரசாக இருந்தால், அந்த அரசின் நாயகர்கள் வரவேற்கவேண்டுமே தவிர, வக்கணை - வழக்கு மிரட்டல் என்று எதிர்மறைச் சிந்தனைக்கு ஆளாகிவிடுவது நல்லதல்ல.

சென்னையும், தமிழ்நாடும் இரண்டாவது இடத்திற்குச் சென்றுவிட்டதை எண்ணினால், நம் உள்ளம் பதைபதைக்கிறது; மக்கள் சென்னையை விட்டு வெளியேற விரும்பும் ஒரு சூழலில், இப்போதாவது அனைவரது ஆலோசனைகளைக் ஏற்று செயல்படுவதில் அலட்சியம் வேண்டாம்.

மூன்று மாத மருத்துவர்கள் நியமனத்தில் ஒரு மாத ஊதியம் (லஞ்சம்) கமிஷன் என்று கேட்கப்படுவதாக ஊடகங்களில் - தொலைக்காட்சிகளில் செய்திகள் வருவது எவ்வளவு கேவலம்!

இந்த நேரத்தில்கூட ஊழல் தொற்றுக்கு முடிவு கட்டவேண்டாமா?

ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியை விமர்சிப்பது என்பதை நல்ல உணர்வுடன் ஆட்சியாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மாறான நிலை என்றால், அது ஆளும் கட்சிக்கோ, முதலமைச்சருக்கோ பெருமைதானா?

நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.எஸ்.பாரதிக்கு நீதிமன்றம் அளித்த பிணையை ரத்து செய்ய காட்டிய அதிதீவிர அவசரம்பற்றி, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்ட கேள்வி, எத்தனையோ அவசரப் பணிகள் கொரோனா தொற்றைத் தடுப்பதற்கு இருக்கையில், இதில் மட்டும் ஏன் இவ்வளவு அதிவேகம் காட்டுகிறது அரசு என்ற கேள்வி இன்றைய தமிழக அரசியல் பழிவாங்கும் படலத்தை அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டவில்லையா?

நாளை முதல் (19.6.2020) ஊரடங்கு சென்னை முதலிய நான்கு மாவட்டங்களிலும் கடுமையாக கடைப்பிடிப்பதற்கு மக்கள் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும்.

முகக்கவசம் அணிவது மிகமிக முக்கியம்; இதில் யாரும் அலட்சியம் காட்டக்கூடாது; இப்போதைக்கு இதுதான் கரோனா தடுப்பு மருந்து. முன்பே - இது உலக மருத்துவர்கள் வலியுறுத்திய தடுப்பு சிகிச்சை முறையாகும். நம் மக்கள் தங்களையும் பாதுகாத்து, தங்கள்குடும்பங்களை, சமூகத்தைப் பாதுகாக்கத்தான் அரசின் கட்டுப்பாடுகள் என்பதை முற்றாக உணர்ந்து, முழு ஒத்துழைப்பைத் தந்து கொரோனாவைத் தடுப்போம். இங்கிலாந்தில் மருந்து கண்டுபிடித்துள்ளனர் என்பது ஒரு வெள்ளி முளைத்த வெளிச்சச் செய்தியாகும். நல்ல ஆறுதலும்கூட!

அனைவரும் ஒத்துழைப்போம்! கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வருவோம்!!"

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: “முன்களப் பணியாளர்களையோ, அரசு ஊழியர்களையோ இழக்கும் நிலை இனியும் ஏற்படக்கூடாது”- மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!