Tamilnadu

மக்களுக்கு ஒரு நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயம்? இ-பாஸ் வாங்காமல் திண்டுக்கல் வரைச்சென்ற அர்ஜூன் சம்பத்!

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கு மட்டும் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே சென்னை உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கு தமிழக அரசின் இ-பாஸ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை அமலில் உள்ளது. உரிய காரணங்கள் இருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது.

அவ்வாறு இ-பாஸ் இல்லாதவர்களை வந்த வழியிலேயே போலிஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், இ-பாஸ் இல்லாமல் திண்டுக்கல் மாவட்டத்துக்கு செல்ல முயன்ற இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட கரூர், திருச்சி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் போலிஸார் கடுமையான சோதனைக்கு பிறகே வாகன ஓட்டிகளை அனுமதித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றுக் காலை வேடச்சந்தூருக்கு செல்வதற்காக காரில் வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத்தை மாவட்ட எல்லைப் பகுதியில் போலிஸார் மடக்கி இருக்கின்றனர்.

அப்போது கல்வார்ப்பட்டி அருகே இடைமறித்து இ-பாஸ் கேட்டபோது இல்லையெனக் கூறியதால், அவர் வந்த காரை வந்த வழியே திருப்பி அனுப்பியுள்ளனர். சாமானிய மக்களே காத்திருந்து இ-பாஸ் பெற்று சொந்த ஊர்களுக்கு சென்றுக் கொண்டிருக்கும் நிலையில், ஒரு கட்சியின் தலைவராக உள்ளவரே அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பது மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு : ஜூன் 19-30 வரை கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன? #Lockdown