Tamilnadu
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் டீனுக்கு கொரோனா? - திடீர் விடுப்பால் பரபரப்பு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பின் மையப் புள்ளியாக சென்னை மாறியுள்ளது. அதனால் சென்னையில் மட்டுமே ஒட்டுமொத்த பாதிப்பு 30,444 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 397 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முக்கிய அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிகளவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கே கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி சமீபத்தில், மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர்கள், முதுநிலை மாணவர்கள் என 65 பேர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து தற்போது மருத்துவமனை டீன் ஜெயந்திக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே டீன் ஜெயந்தி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விடுப்பில் சென்றுள்ள ஜெயந்திக்கு பதில் ஹெபடாலஜி பிரிவு இயக்குனர் நாராயணசாமி புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான மருத்துவக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர். ஜெயந்தி விடுப்பில் இருப்பதால், சென்னை மருத்துவக் கல்லூரியின் ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும் பேராசிரியருமான நாராயணசாமி, அடுத்த உத்தரவு வரும் வரை மருத்துவமனையின் புதிய டீனாக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
மேலும், இதுவரையில் மருத்துவமனை டீன் பயன்படுத்திய அனைத்து நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுக்கும் இவருக்கு வழங்கப்படுகிறது” என அதில் அவர் தெரிவித்துள்ளார். தலைநகர் சென்னையில் அதிகளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் முக்கியமான அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் பலருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்