Tamilnadu

“சாலை அமைக்க டெண்டர் வழங்கியதில் முறைகேடு - முதல்வர் மீது வழக்கு பதிய வேண்டும்” : தி.மு.க மனு!

தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் 462 கிலோ மீட்டர் தூரத்திற்கு, சாலைகள் விரிவாக்கத்துக்கு 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோரப்பட்டது.

இந்த டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி, தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வழக்கமாக ஆண்டுதோறும் டெண்டர் பிறப்பிக்கப்படும். ஆனால், இந்த டெண்டர் ஐந்து ஆண்டுகளுக்கு கோரப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, ஆண்டுதோறும் டெண்டர் கோரும் போது ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும், அந்த வகையில் 500 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவாகும் எனவும், தற்போது 800 ரூபாய் வரை அதிக செலவில் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்கள் டெண்டர் ஆவணங்களை சமர்ப்பிக்க இயலாத நிலையில், துறை அமைச்சரான முதல்வருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பேரிடர் காலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், சாலை அமைக்க டெண்டர் கோரி முறைகேடுகளில் ஈடுபட்டது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: “டெண்டர் வழங்கியதில் முறைகேடு; முதல்வர் மீது FIR பதிவு செய்ய வேண்டும்”: உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு