Tamilnadu

“தேர்வை ரத்து செய்வது ஒன்றும் புதிதல்ல” - மாணவர்கள் நலன் கருதி அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டுகோள்!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பள்ளி பொதுத்தேர்வுக்கான தேதியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இதற்கு பெற்றோர், கல்வியாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

மாணவர்களின் மனநலன், உடல் நலன் குறித்த புரிதல் இன்றி தன்னிச்சையாக இப்படி அறிவிப்பதா என கடும் விமர்சனம் எழுந்தது. ஆனால், தேர்வை நடத்தியே தீர்வது என அரசு மும்முரமாகs செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் தலை மீது கத்தி தொங்குவதை வேடிக்கை பார்க்க முடியாது. ஜூலையில் நடத்தலாமா என பதிலளியுங்கள் என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், அண்டை மாநிலமான தெலங்கானாவில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்திலும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் இதுபோன்ற கடினமான சூழல்களில் தேர்வை ரத்து செய்வது என்பது புதிதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குழந்தை நேயப்பள்ளி கூட்டமைப்பான சுடரொளி வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடினமான சூழல்களில் தேர்வை ரத்து செய்வது வழக்கமானது என்றும், அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு அரசு செயல்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

அதில், 1976 ஆம் ஆண்டில் அடுத்த ஆண்டு புதிய பாடத்திட்டம் வரக்கூடிய சூழல் இருந்தது. கணித பாடத்திட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டது. அத்தகைய சூழலில் மாணவர்கள் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சுமையாகும் எனக் கருதி அப்போதைய பத்தாம் வகுப்பு தேர்வு (பொது தேர்வு அப்போது கிடையாது) ரத்து செய்யப்பட்டு 100% தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அப்போது 60% மட்டுமே தேர்ச்சி விகிதம் இருந்தது கவனிக்கத்தக்கது.

2008ல் வேலூரில் விடைத்தாள் திருத்தும் மையத்தில் தீ விபத்து ஏற்பட்டத்தில் 12 ஆயிரம் விடைத்தாள்கள் கருகின. அந்தச் சூழலில் மறு தேர்வு வைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இது குழந்தைகளின் தவறு அல்ல. மறுதேர்வு குழந்தைகளின் உளவியலை பாதிக்கும் என கருதி விடைத்தாள் கருகிய அனைத்து குழந்தைகளுக்கும் தேர்ச்சி அளிக்கப்பட்டது.

2013ம் ஆண்டில் சத்தியமங்கலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து அனுப்பபட்ட விடைத்தாள்கள் காணாமல் போயின. அப்போதும் சம்பந்தப்பட்ட குழந்தைகள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. பிற பாடத்தின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “தேர்வெழுதச் செல்லும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால்கூட இந்த அரசை சும்மா விடமாட்டோம்” - தி.மு.க எச்சரிக்கை!