Tamilnadu
“தேர்வு நடத்துவதில் ஏன் அவசரம்? மாணவர்கள் உயிர்மீது அரசுக்கு கவலையில்லையா?”-ஐகோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி
கொரோனாவால் தமிழகத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வருகிற 15ம் தேதி பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வை நடத்த எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதும்போது தனிமனித இடைவெளி போன்ற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கல் எழாதா? ஒரு மாதம் தள்ளிவைக்காமல் தேர்வை நடத்த ஏன் அரசு அவசரம் காட்டப்படுகிறது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதன் பின்னர் 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது. ஆகவே, கொரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் தேர்வு நடத்தலாம். ஜூலை 2வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா? என பதிலளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை மதியம் 2.30 மணிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன், 11 மாநிலங்களில் ஏற்கெனவே தேர்வுகள் நடந்துள்ளன. மத்திய அரசு தேர்வுகளை நடத்த அனுமதித்துள்ளது. தேர்வு மையங்களில் கிருமிநாசினி பயன்படுத்துதல், மாணவர்கள் மாஸ்க் அணிவது உள்ளிட்ட அறிவுரைகள் பின்பற்றப்படும்.
அக்டோபர், நவம்பரில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம். அதனால் பின்னாளில் தேர்வை நடத்துவது ஆபத்தானது என வாதிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பேசிய நீதிபதிகள், லட்சக்கணக்கான மாணவர்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால், தற்போது தேர்வு நடத்துவதில் எந்த லாஜிக்கும் இல்லை.
பொதுத்தேர்வு நடத்துவதால், மாணவர்களின் வாழ்வு பாதிக்கப்பட்டால் யார் பொறுப்பேற்பது? மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் ஆபத்தில் உள்ளது பற்றிக் கவலையில்லையா?
மாணவர்கள் வாழ்வை இழந்தபிறகு இழப்பீடு வழங்குவதா? அவர்களின் வாழ்வுக்கு யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? என சரமாரியாக அரசுத் தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, பொதுத்தேர்வு தொடர்பாக ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கையும் அதனோடு சேர்த்து ஜூன் 11ம் தேதி விசாரிப்பதாகவும், பொதுத்தேர்வு தொடர்பாக விரிவான விவரங்களை அரசு தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Also Read
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!