Tamilnadu
அரசு ஊழியர்களை அதிமுகவின் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவதா?: எஸ்பி.வேலுமணிக்கு திமுக எம்.எல்.ஏ கண்டனம்
அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்களை, அரசுப் பணிகளை செய்ய விடாமல், தனது கட்சிப் பணிகளுக்காகவும் , சுய லாபத்திற்காகவும் பயன்படுத்தி வரும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைக் கண்டித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை பின்வருமாறு:
“அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் புதிதாக பணியில் சேர்ந்த அலுவலக உதவியாளர்களை, கடந்த 18.05.2020 முதல், அ.தி.மு.க. சார்பாக தொண்டாமுத்தூர் தொகுதியில் பொருட்கள் வழங்கவும், 2021 தேர்தலில் முறைகேடாக பணம் கொடுப்பதற்கு ஏதுவாக வீடு வீடாக கணக்கு எடுக்கவும் பயன்படுத்தி, இதை வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் வரை தொடர எத்தனித்துள்ளதாக தெரியவருகிறது.
மேலும், தற்போது கோவையில், மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் திட்ட இயக்குனராக பணியாற்றி வரும் செல்வராஜ், அரசாங்க பதிவேட்டில் உள்ள, கோவையில் இயங்கி வருகின்ற மகளிர் சுய உதவி குழுக்களின் முகவரிகள் மற்றும் பெயர்கள் அடங்கிய விவரங்களை, கோவையில் உள்ள அ.தி.மு.க.,வினருக்கு அளித்துள்ளார்.
இந்தப் பேரிடர் காலத்தில், ஒரு அரசு அதிகாரியாக கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமான எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ளாமல், தற்பொழுதும் மகளிர் சுய உதவிக் குழுக்களை அழைத்துப் பேசி உத்திரவிட்டுக் கொண்டிருப்பதின் மர்மம் என்ன?
கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லையென்றால், தங்கள் பதவி பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்திலேயே அனைத்து அரசு அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பேரிடர் காலத்தில் மக்கள் நலன் பற்றி யோசிக்காமல், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களின் வரிப் பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பணியாளர்களை, அரசுப் பணிகளைச் செய்யவிடாமல், தனது கட்சிப் பணிகளுக்காகவும், சுய லாபத்திற்காகவும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயன்படுத்தி வருகிறார்.
அரசு அதிகாரிகளும் இதற்கு துணை போகிறார்கள். இது தொடர்ந்தால், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் கோவையில் மிகப்பெரிய முறைகேடு நடக்கும். ஆகவே, அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அரசுப் பணியாளர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தனது சுய லாபம் மற்றும் அ.தி.மு.க.,வின் கட்சிப் பணிகளுக்கு முறைகேடாக பயன்படுத்தி வருவதையும், ஜனநாயகத்தில் கேலிக்கூத்தாக உள்ள இதுபோன்ற நிகழ்வுகளையும் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேலும் இதுபோன்று, அரசுப் பணியாளர்களை அ.தி.மு.க.,வின் கட்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தி, அதிகார துஷ்பிரயோகம் செய்வது தொடர்ந்தால், மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?