Tamilnadu
“ரூ.710 செலுத்த வேண்டியவருக்கு ரூ. 2,140 பில்” - மக்களைக் குழப்பி, பணத்தைச் சுரண்டும் மின்சார வாரியம்!
“மின் கட்டணக் குழப்பம்; மக்களைச் சுரண்டும் மின்சார வாரியம்!" எனக் குறிப்பிட்டு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகள், வணிகக் கட்டடங்கள் மற்றும் தொழிலகங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, மின் நுகர்வு அளவுகளைக் குறித்து, அதற்கான கட்டணம் வசூலித்து வருகின்றது.
100 யூனிட்டுக்குக் கீழே மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது. மின்சாரப் பயன்பாட்டை இரு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கிடும்போது, இரு மாதங்களுக்கான பயன்பாட்டு அளவைக் கணக்கிட்டு, அதை இரண்டால் வகுத்து, ஒவ்வொரு மாத பயன்பாட்டுக்காக வரையறுக்கப்பட்டுள்ள விகிதப்படி கட்டணம் வாங்க வேண்டும்.
ஆனால், இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து பயன்படுத்தப்பட்ட மொத்த மின் அளவீட்டைக் கணக்கிடுகின்றார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு வீட்டின் மாத மின்சாரப் பயன்பாடு 400 யூனிட் என்றால், 2 மாதங்களுக்கு 800 யூனிட் என குறிக்கப்படுகின்றது. இதை இரண்டால் வகுத்து 400 யூனிட் கட்டண விகிதங்களில், யூனிட்டுக்கு ரூ.3 என கட்டணம் பெற வேண்டும்.
ஆனால் மின் வாரியம், ஒட்டுமொத்தமாக 800 யூனிட் கட்டண விகிதப்படி, ஒரு யூனிட்டுக்கு ரூ.4.60 என்ற வீதத்தில் கட்டணம் வாங்குகின்றது.
இதே போன்று 1,000 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, அதை இரண்டு 500 யூனிட்டுகளாகப் பிரித்து, ஒரு யூனிட்டுக்கு ரூ. 4.50 கட்டணம் வசூலிக்க வேண்டும்.
ஆனால், ஒட்டுமொத்தமாக, 1000 யூனிட்டுக்கு உண்டான கட்டண விகிதப்படி யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 கட்டணம் வாங்குகின்றார்கள்.
இத்தகைய கணக்கீட்டு முறையில், மின் நுகர்வோர், 20 முதல் 30 விழுக்காடு வரை கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகின்றது.
இந்தப் பிரச்சினையை, மின்சார வாரிய அலுவலர்கள், அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு செல்லும்போது, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலோடுதான் 2 மாதங்களுக்கு ஒரு முறை மின் பயனீட்டு அளவு கணக்கிடப்பட்டு, மின்சார வாரியம் கட்டணம் வசூலிப்பதாகக் கூறுகின்றார்கள்.
இரண்டு மாதங்களுக்கு மொத்தமாகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவை இரண்டு மாதங்களுக்கும் சரிபாதியாகப் பிரித்து மின் கட்டணம் வாங்கினால், மின்சார வாரியம் இழப்பைச் சந்திக்கும் என்று கூறுகின்றனர்.
மாதந்தோறும் மின் பயனீட்டு அளவைக் குறிப்பதற்கு, ஆள் பற்றாக்குறை, நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், இந்த முறையைப் பின்பற்றுவதாக, மின்சார வாரியம் கூறுகின்றது. அதற்காக, கூடுதல் கட்டணம் வாங்குவதை நியாயப்படுத்த முடியாது.
கொரோனா ஊரடங்கால் மின் பயனீட்டு கணக்கெடுப்பு நடக்காத நிலையில், கடந்தமுறை செலுத்திய கட்டணத்தையே இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவித்தனர்.
அதன்படி, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 350 யூனிட் பயன்படுத்தி இருந்தால், ரூ.650 மின் கட்டணம் மற்றும் நிலைக் கட்டணம் ரூ.30 சேர்த்து ரூ.710 செலுத்த வேண்டும். மின்வாரிய அறிவிப்பில் மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கும் இதே தொகையை மே முதல் வாரத்தில் செலுத்தி இருப்பர்.கொடை கடுமையால் மே, ஜூன் மாதங்களில் 550 யூனிட் மின்சாரத்தை அதே நபர் பயன்படுத்த வேண்டிய நிலை உருவானால், அதற்கு அவர் ரூ.2,110 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 என மொத்தம் ரூ.2,140 செலுத்த வேண்டும்.
ஆனால் மின்சார வாரியமோ, ஏற்கனவே செலுத்திய 350 யூனிட்டுக்கு தற்போதைய 550 யூனிட்டையும் சேர்த்து, மொத்தமாக 900 யூனிட்கணக்கிட்டு ரூ.4,420 மற்றும் நிலைக்கட்டணம் ரூ.30 சேர்த்து, ரூ.4,450 கட்டணம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
அதில் கடந்த முறை செலுத்திய ரூ.680ஐ (நிலுவைக் கட்டணம் அல்லாமல்) கழித்துவிட்டு ரூ.3,770ஐ செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் அந்த நபரிடம் இருந்து 550 யூனிட்டுக்கு உள்ளான கட்டணமாக ரூ.2,140 க்குப் பதிலாக, ரூ.1630 கூடுதலாகச் சேர்த்து வாங்குகின்றார்கள்.
இவ்வாறு, மின்நுகர்வோரைக் குழப்பத்தில் ஆழ்த்தி, மக்களைச் சுரண்டும் நிலைக்கு, தமிழக மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்; கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை மேலும் துயரப் படுகுழியில் தள்ளக் கூடாது.
எனவே, மின்சாரப் பயன்பாட்டை, ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டு, அதற்கு ஏற்ற மின் கட்டணம்தான் வாங்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!