Tamilnadu
“தலைநகரை ஆட்டிப்படைக்கும் கொரோனா” - கோயம்பேடு சந்தை மூடப்பட்டு ஒருமாதமாகியும் சுத்தம் செய்யப்படாத அவலம்!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வருவதை அரசு புள்ளி விவரங்களே காட்டுகின்றன. அரசின் அலட்சியத்தால் நோய்த்தொற்று வேகமாகப் பரவுகிறது.
தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி, பழம், மலர் அங்காடியான கோயம்பேட்டில் மக்களும் வியாபாரிகளும் தனிமனித இடைவெளியில்லாமல் கூடியபோது சென்னை மாநகராட்சியும் சிஎம்டிஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமும் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தன. இதனால் சென்னையிலிருந்து பல மாவட்டங்களுக்கு இந்நோய் பரவியது.
கோயம்பேடு சந்தை மூடப்பட்டு ஒருமாதமாகியும் இன்னும் சுத்தம் செய்யப்படவில்லை. அரசு நிர்வாகம் எவ்வளவு ‘வேகமாக’ வேலைசெய்கிறது என்பதற்கு இதுவே சான்று. தற்போது பெரும்பாலான மாவட்டங்களில் நோய்த்தொற்று குறைவாக இருந்தாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையை திருமழிசைக்கும், பழச்சந்தையை மாதவரத்திற்கும் அரசு மாற்றியபோதும், சென்னையில் வைரஸ் தொற்றின் வேகம் குறையவில்லை.
சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளில் வெள்ளியன்று மட்டும் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். இதுவும் அரசு சொல்லும் புள்ளிவிவரம் தான்.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தால் அந்த நபருக்குச் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உபாதைகள் இருந்து மரணித்தால் அந்த உபாதைகளால் மரணம் ஏற்பட்டதாகப் பதிவு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு அல்லது அறிகுறியுடன் ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற பின்னர் சிகிச்சை தொடங்கி சில மணி நேரங்களிலேயே இறந்து விடுகிறார்கள். இந்தியாவிலேயே அதிகமாகச் சுகாதார கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட தமிழகத்தில் இவ்வளவு மரணங்கள் என்பது அரசின் நடவடிக்கைகளைக் கேள்விக்குறியாக்குகின்றன.
பலர் பரிசோதனை முடிவுகளைப் பெறுவதற்கு முன்பே மரணிக்கின்றனர். நடுத்தர வயதினர் பலர் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் மரணம் அடைந்து வருவது அந்தத் துறையின் செயல்பாடுகள் மீது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, அரசு பொது மருத்துவமனையின் தலைமை செவிலியர் இறந்துவிட்டார். அவர் கடந்தமாதம் ஓய்வுபெற்று பணி நீட்டிப்பு காரணமாக கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார். கொரோனா உறுதி செய்யப்பட்ட அவர் மாரடைப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறால் உயிரிழந்ததாக மருத்துவ ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!