Tamilnadu
“திரைக்காக கற்பனை செய்த காட்சி, நிஜமாகவே நடந்தது” : பாலுமகேந்திராவின் நினைவுகளைப் பகிரும் சசிக்குமார்!
இயக்குனர் பாலுமகேந்திரா தமிழ் திரையுலகின் மிக முக்கிய படைப்பாளிகளில் ஒருவர். அவரிடம் பணியாற்றிய பல திரைகலைஞர்கள், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் என பலரும் அவருடன் பணியாற்றிய அனுபவம் போன்ற பல நினைவுகளை கிர்ந்துவருகின்றனர். நடிகரும் இயக்குனருமான சசிகுமார் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாலுமகேந்திரா நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் சசிகுமார் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில், “அழியாத கோலங்கள் பாலு மகேந்திரா!
திடீரென ஒரு நாள் பாலு மகேந்திரா சாரிடமிருந்து போன். அதை அட்டென்ட் செய்வதற்குள் மனம் பட்ட பாடு அப்படியே இப்போதும் நெஞ்சில் நிற்கிறது.
“ஹலோ சார்..."
“நான் உன்னைப் பார்க்க வரலாமா?"
“சார், நானே உங்க ஆபிஸ்க்கு வரேன் சார்"
‘ஏன், எனக்கு உன்னோட ஆபிஸ்ல ஒரு கப் காபி கொடுக்க மாட்டியா?"
நான் என்ன சொல்ல முடியும்? காலத்தால் அழியாத பெரும் படைப்புகளைக் கொடுத்த கலைஞன். என் அலுவலகம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். பாலு மகேந்திரா சாரை நான் முதன் முதலில் பார்த்தது ஈழப் போருக்கு எதிராக சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடந்த நாளில். கொட்டும் மழை. பாலா அண்ணன்தான் சாரிடம் என்னை நிறுத்தி, ''இவன் என்னோட அசிஸ்டென்ட். 'சுப்ரமணியபுரம்'னு ஒரு நல்ல படம் பண்ணியிருக்கான்" என அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு நாள் பாலு மகேந்திரா சார் 'சுப்ரமணியபுரம்' படத்தைப் பார்க்க ஆசைப்பட, சிறப்பு காட்சியாகப் போட்டுக் காண்பித்தேன். மிக நுணுக்கமாகக் கவனித்துப் பாராட்டினார். அவருக்கே உரிய பார்வை. அதைத் தாண்டி அவரிடம் தனிப்பட்ட ரீதியில் பேசிப் பழகுகிற அளவுக்கு நான் நெருங்கவில்லை. அது, ஒரு மாபெரும் கலைஞனுக்கு நான் கொடுத்த பயம் கலந்த மரியாதை.
நான் பார்த்து வியந்த மனிதர் மிக எளிமையாக என் அலுவலகத்துக்கு வந்தார். 'தலைமுறைகள்' கதையைச் சொன்னார். ''எனக்கு இப்போ வயசு 70-க்கு மேலாகுது. இந்த வயசுலயும் என்னால படம் பண்ண முடியும். என்னோட சாவுங்கிறது நான் படம் பண்றப்பவே அமையனும்" என்றார். 'ஈசன்' சரியாகப் போகாததால், 'கொஞ்ச காலத்துக்கு தயாரிப்பே வேண்டாம்' என நான் தீர்க்கமாக முடிவெடுத்திருந்த நேரம் அது.
ஆனாலும், அவர் கதை சொல்லி முடித்தவுடன், ''கண்டிப்பா பண்றேன் சார்" என்றேன். ''எல்லார் கதவையும் தட்டிட்டு கடைசி நம்பிக்கையாத்தான் உன்கிட்ட வந்தேன்" என்றார். ''நீங்க முன்னாலேயே வந்திருக்கலாமே சார்" என்றேன். அவர் கிளம்பிய உடன் அலுவலகத்தில் இருந்தவர்கள், ''இந்த நேரத்தில் மறுபடியும் தயாரிப்பு தேவையா?" என்றார்கள். ''நம்பி வந்த ஒரு கலைஞனை நான் சந்தோஷமா அனுப்பி வச்சிருக்கேன். இதைவிட சினிமாவுல சாதிக்க எனக்கு ஒண்ணுமில்ல" எனச் சொல்லி எல்லோரையும் அமைதியாக்கினேன்.
குறைந்த முதலீட்டில் எடுப்பதற்காக ஃபைவ் டி கேமிராவில் முழு படத்தையும் எடுப்பதாகச் சொன்னார் பாலு மகேந்திரா சார். படத்தில் ஒரே ஒரு காட்சியில் நான் நடிப்பதாக முடிவானது. கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவனாக, தனது தாத்தாவின் நினைவுகளை எண்ணி பேரன் அழுவதாகக் காட்சி. ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். நான் போவதற்கு முன்னரே மொத்த கூட்டத்தையும் பயன்படுத்தி காட்சிகளை எடுத்துவிட்டார். நான் போன போது நான் மட்டும்தான் நின்றேன். ''உன்னோட தாத்தாவை நினைச்சுக்க...'' என்றார். அவர் சொல்லச் சொல்ல நான் கண் கலங்கி நின்றிருந்தேன். ஒரு வார்த்தைகூட வசனம் இல்லை. ஆனால், அந்தக் காட்சி அவ்வளவு நெகிழ்வாக வந்திருந்தது. எப்படி என்னிடமிருந்து அப்படியொரு நடிப்பை வாங்கினார் என்பது எனக்கு இப்போதும் ஆச்சர்யம்தான். அவரும் மனம் விட்டுப் பாராட்டினார்.
ஞாயிற்றுக் கிழமை என்றால் அவரிடமிருந்து அவசியம் அழைப்பு வந்துவிடும். ''தனியா இருக்கேன். சசி வர்றியா?" என்பார். ஓடோடிப் போய்ப் பார்ப்பேன். அவர் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் சொல்வார். நல்லது, கெட்டது என அத்தனை அனுபவங்களையும் கொட்டுவார்.
படத்தில் எனக்குப் பெரிய சந்தோஷம், அவர் அதில் நடித்ததுதான். ''சார், உங்களை நடிகரா அறிமுகப்படுத்துற பாக்யம் எனக்கு அமைஞ்சிடுச்சு" என்பேன் சிரித்தபடி. அவர் புகைப்படத்தை விளம்பரத்திலோ வேறு எதிலுமோ போடக்கூடாது என்றார். மிகவும் வற்புறுத்தி தலையில் தொப்பி இல்லாத அவருடைய படத்தை பெரிய பேனராக்கி சென்னையில் அத்தனை பேரும் பார்க்கும் விதமாக கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகில் வைத்தேன்.
படத்தில் இசை மிகச் சிறப்பாக வந்திருப்பதாகச் சொல்லி, இளையராஜா சாரை பார்க்க என்னை அழைத்துப் போனார். ஒரு விழாவிற்காக ராஜா சார் அவர் குழுவுடன் ரிகர்சல் பார்த்துக் கொண்டிருந்தார். பாலு மகேந்திரா சாரும் நானும் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தபோது, 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே...' பாடலின் வயலின் பிட் ஒலித்துக் கொண்டிருந்தது. இப்போது நினைத்தாலும் மனம் சிலிர்க்கிறது. திரையுலக ஜாம்பவான்களான பாலு மகேந்திரா சாரும் ராஜா சாரும் பேசிக்கொண்டிருக்க, அவர்கள் அருகே நிற்கிற பாக்யம் வாய்ந்த கணம் அது. யாருக்குக் கிடைக்கும் இந்த பேரதிர்ஷ்டம்?
ஆரம்பத்திலேயே செலவுகளுக்குப் பயந்து, ''படத்தை அவார்டுக்கு மட்டும் அனுப்பலாம்'' என்றார். ''தமிழ் மொழியைப் பற்றி, அதன் அவசியத்தை உணர வேண்டிய இன்றைய தலைமுறையைப் பற்றிப் படம் பண்ணிட்டு, அதை அவார்டுக்கு மட்டும் அனுப்புறது சரிப்படுமா? தமிழர்கள் அத்தனை பேரும் பார்க்க வேண்டிய படம் இது. நான் எல்லா தியேட்டர்லயும் படத்தை ரிலீஸ் பண்றேன்" என்றேன். அவர் மலைப்போடு பார்த்தார். அவருக்கு மிகப் பிடித்த கிறிஸ்துமஸ் திருநாளில் தமிழகம் முழுக்க படத்தை வெளியிட்டேன்.
ரிலீஸ் நேரத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தோம். ''எப்படி சசிகுமார் தயாரிப்பில் நீங்கள் படம் இயக்க முடிவானது?" என்றார்கள் அவரிடம்.
“இது பிரபஞ்சத்தின் சக்தி. இந்த வயதில் தலைமுறைகள்னு ஒரு கதை பண்ணுவேன். அதை சசிகுமார்ங்கிறவன் தயாரிப்பான். இதெல்லாம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது. அதன்படியே நடந்திருக்கிறது" என்றார். சிலிர்த்துப் போனேன்.
திடீரென ஒரு நாள் சார் கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். போய்ப் பார்த்தேன். ''என்ன சசி வந்துட்டியா?" என்றார். ''சீக்கிரம் சரியாகி வாங்க சார். அடுத்த படம் பண்ணனும்ல" என்றேன். ஏற்கெனவே அடுத்த கதை ஒன்றைச் சொல்லி இருந்தார். பெட்டில் இருந்தபடி மறுபடியும் கதை சொன்னார். ''ஓய்வு எடுங்க சார்..." என்றேன். ''எனக்கு ஓய்வு தேவை இல்லை. வியூ பைண்டரைப் பார்த்தபடியே செத்தால், அதுதான் எனக்குக் கொடுப்பினை" என்றார். காலம் அதற்கான வாய்ப்பைக் கொடுக்கவில்லை. பிரார்த்தனைகள் பொய்யான நாளில் அவர் மறைந்தார்.
அவர் எண்ணியபடியே 'தலைமுறைகள்' படத்துக்குத் தேசிய விருது கிடைத்தது. பெருமிதப்படுவதா, 'இதைக் கேட்க அவர் இல்லாமல் போய்விட்டாரே' எனப் புலம்புவதா எனப் புரியாதிருந்தேன். 'தலைமுறைகள்' படத்தில் கவிதைப் போட்டியில் வென்று தாத்தாவுக்காக பேரன் பரிசு வாங்குவதுபோல் காட்சி வரும். அதைப்போலவே தாத்தாவுக்கான தேசிய விருதை அவர் பேரன் ஸ்ரேயாஸ் வாங்கினான்.
திரைக்காக பாலுமகேந்திரா சார் கற்பனை செய்த காட்சி, நிஜமாகவே நடந்தது. எந்தக் கலைஞனுக்கு அமையும் இந்த அரிய நிகழ்வு? காலம், மிக அபூர்வ பொக்கிஷங்களை சர்வ சாதாரணமாகப் பறித்துவிடுகிறது. ஆனாலும், பாலு மகேந்திரா சாரின் படைப்புகளையும், அவர் சம்பாதித்திருந்த அன்பையும் காலத்தால் காலத்துக்கும் தோற்கடிக்க முடியாது!” என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!