Tamilnadu
மீண்டும் உயருகிறது பேருந்து கட்டணம்.. கொரோனா காரணம் காட்டி கஜானாவை நிரப்ப எடப்பாடி அரசு திட்டம்?
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை எட்டியுள்ளது. இப்படி இருக்கையில் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசோ, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கி மேலும் பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகை செய்கிறது.
மத்திய அரசுடன் போராடி மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியை வைத்து, அமைப்புசாரா உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிய நிவாரணங்களை அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளாமல், தொழில் முடக்கத்தை காரணம் காட்டி, மக்களை வைரஸ் பாதிப்புக்குள் தள்ளி இன்னல்களையே இந்த அரசு ஏற்படுத்தி வருகிறது என பல தரப்பினர் அணுதினமும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், நாளையுடன் நான்காம் கட்ட ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், ஐந்தாம் கட்டமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டாலும் ஏராளமான தளர்வுகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகவே, 2 மாதங்களுக்கும் மேலாக முடக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்தை ஜூன் 1 முதல் செயல்படுத்த அதிமுக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, கொரோனா பாதிப்பு விகிதத்தை கணக்கில் கொண்டு பேருந்துகளை அதிகம் மற்றும் குறைவாக இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு பேருந்தில் 26 பேர் மட்டுமே தனி மனித இடைவெளியுடன் பயணிக்க வேண்டும் என்ற வகையில் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு பேருந்துகள் பழுது பார்க்கவும் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேநேரத்தில் குறைவான எண்ணிக்கையிலான பயணிகளை கொண்டே பேருந்துகள் இயக்கப்படுவதால், கட்டணத்தை உயர்த்தவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே மக்கள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் நிலையில், தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது கொரோனாவை காட்டிலும் மிகுந்த பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்களும், அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?