Tamilnadu
‘மனுக்களை நிரூபிக்கத் தயார்.. நேரம், இடம் நீங்கள் சொல்லுங்கள்’ - அமைச்சர் காமராஜுக்கு தி.மு.க சவால்!
கடந்த 13 தேதி ஒன்றிணைவோம் வா மூலம் 98,752 மனுக்களை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் தலைமை செயலாளரிடம் தந்த அணைத்து மனுக்களும் போலியானவை என உணவு துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அமைச்சர் காமராஜ் நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் நேரில் வந்து தி.மு.க. கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது நிரூபிக்கத் தயார் என சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் பேரா. கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்தது அ.தி.மு.க. அரசு. அப்படி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் விளைவாகப் பல லட்சம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து அவர்களுக்கு அ.தி.மு.க. அரசு தேவையான உதவிகளைச் செய்திருக்க வேண்டும்.
ஆனால், அரசு அதற்கான முயற்சிகளை எடுக்கத் தவறிய நிலையில் கருணை உள்ளத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் எண்ணத்தில் எங்கள் கழகத் தலைவர் அவர்கள் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை அறிவித்தார்கள். அதன் மூலம் பல லட்சம் மக்களுக்கு உணவுப் பொருட்களும், காய்கறிகளும், மருந்துப் பொருட்களும் நிதி உதவிகளும் கழக உடன்பிறப்புகள் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் வழங்கப்பட்டது. உணவுகளைத் தயாரித்துப் பொட்டலங்களாகவும் வழங்கினோம்.
இந்த 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்துக்காக பொதுத் தொலைப்பேசி சேவை ஒன்றையும் அறிவித்திருந்தோம். அந்தத் தொலைப்பேசி வாயிலாக ஏறத்தாழ 15 லட்சம் பேர் தங்களது பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள். உணவு, மருந்துப் பொருட்களை வழங்குவதற்காகவே இச்சேவைத் தொடங்கப்பட்டது. ஆனால், இவை இல்லாமல் பல்வேறு கோரிக்கைகளைப் பொதுமக்கள் இதில் பதிவு செய்துள்ளார்கள். இதில் ஒரு லட்சம் மனுக்களைத் தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம்.
மீதமுள்ள மனுக்களை மாவட்ட ரீதியாகப் பிரித்து தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் மூலமாக மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர்களில் பலரும் இக்கோரிக்கை மனுக்களைப் படித்துப் பார்த்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருப்பதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் கடந்த 28-ம் தேதி சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தி.மு.க. கொடுத்த மனுக்கள் போலியானவை, பொய்யானவை என்று கூறியிருக்கிறார். மக்களிடம் இருந்து வந்த மனுக்களைத் தான் அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளோமே தவிர, இவற்றைப் போலியாகத் தயாரிக்க வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை.
இது தொடர்பாகத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விவாதத்தில் நான் கலந்து கொண்டேன். அவ்விவாதத்தில் அ.தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட ஒருவர், 'தி.மு.க. கொடுத்த மனுக்கள் பொய்யானவை. அதனை நிரூபிக்க உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தயாராக இருக்கிறார்' என்று கூறினார்.
அதற்கு நான் 'இந்த மனுக்கள் அனைத்தும் உண்மை. எங்கள் தலைவரிடம் அனுமதி பெற்று அமைச்சரைச் சந்திக்கத் தயார்' என்று அப்போதே சொன்னேன். இதற்கான அனுமதியை கழகத் தலைவரிடம் நான் பெற்றுள்ளேன்.
அமைச்சர் காமராஜ் அவர்களே, நீங்களே நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள் நேரில் வந்து தி.மு.க. கொடுத்த மனுக்கள் எல்லாமே உண்மையானது என்றும் எங்கள் கழகத் தலைவர் முன்னெடுப்பது பொது மக்களுக்கான நேர்மையான அரசியல்தான் என்பதை நிரூபித்து, தாங்களும் தங்கள் அரசும் நடத்துவதுதான் கபடநாடகம் என்றும் நேர்மையற்ற அரசியல் என்றும் நிரூபிக்கத் தயார் என்பதை பொது அறைகூவலாக விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?