Tamilnadu

“நான் எடப்பாடி பேசுறேன் ஓவர் ஓவர்! வெட்டுக்கிளி: நான் தமிழகத்துக்கு வரமாட்டேன் ஓவர் ஓவர்!” #Locustsattack

உலகமே கொரோனா கொடூரத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் பெரும் துயர்த்திற்கு ஆளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரம் செங்குத்தாக கீழே சரிகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருகிறது. பல குடும்பங்கள் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பலி கொடுத்திருக்கிறார்கள். பலர் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். உலகமே அஸ்தமித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் இயற்கை மேலும் ஓர் பெரிய இடியை மக்கள் தலையில் இறக்கியிருக்கிறது. அதுதான் பாலைவன வெட்டுக்கிளிகள்.

சமீபத்தில் தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காப்பான்’ திரைப்படத்தில் ஒரு தனி வகையான வெட்டுக்கிளிகளை வைத்து எப்படி ஒரு செழிப்பான ஊரைப் பாலை வனமாக்கினார்கள் என்பதை திரையில் காண்பித்திருப்பார்கள். நடந்த சம்பவத்தைப் படமாக்குவது வழக்கம் ஆனால் வழக்கத்திற்குமாறாக படத்தில் பார்த்தது நிஜத்தில் நடக்கிறது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் விவசாயிகள் பெரும் துயர்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். மக்கள் பலர் பசியால் வாடி வதங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்கெனவே பசிக்கும் பட்டிணிக்கும் பஞ்சம் இல்லை. கொரோனா என்னும் நெருப்பாற்றை உலக மக்கள் நீந்திக் கொண்டிருக்கும் சமயத்தில் புதியதாக வெட்டுக்கிளிகள் வந்து அட்டகாசம் செய்கின்றன.

பயிர்களை சேதப்படுத்தி பெரும் உணவு தட்டுப்பாடு பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியினங்களாக அறியப்படுகிறது பாலைவன வெட்டுக்கிளிகள். இந்த பேரழிவு பூச்சிகள் தற்போது கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவின் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் பெரும் உணவு தட்டுப்பாடை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்காவில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கட்டுப்படுத்தாவிடில் பேரழிவை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரித்துள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் உரையாற்றிய உணவு மற்றும் வேளாண் அதிகாரி கீத் க்ரெஸ்மேன் (Keith Cressman), உள்நாட்டு போரால் ஏற்கேனவே உணவு தட்டுப்பாட்டை சந்தித்து வரும் சூடான் நோக்கி வெட்டுக்கிளி படை நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவில் மட்டும் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 2.5 கோடி பேர் உணவு தட்டுபாட்டால் பாதிக்கப்பட உள்ளனர் என ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், இந்த பேரழிவை ஏற்படுத்தும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு அடுத்த மாதங்களில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் நாடுகள்தான் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த பேரழிவு பூச்சியினத்தை அழிக்க இந்திய அரசானது, பாகிஸ்தான் மற்றும் ஈரானுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அழைத்தது. இதனை ஈரான் ஏற்றுக்கொண்டாலும், பாகிஸ்தான் அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. ஒரு பக்கம் பாகிஸ்தானுடன் சண்டை செய்வோம் என்று சொல்லி வட இந்திய மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்குவது மறுபக்கம் பாகிஸ்தானுடன் இணைந்து நடவடிக்கையா?? வேடிக்கையாக இருக்கிறது!

இந்த பேரழிவு பூச்சிகளான பாலைவன வெட்டுக்கிளிகள் இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் விளையும் பயிர்களை அதிகம் தாக்கும் வாய்ப்புள்ளதால், அம்மாநில அரசு சிறிய ரக விமானம் மூலம் மருந்து தெளித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

இத்தகைய எச்சரிக்கைகளைக் கேட்டு ராஜஸ்தான் மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முன்வந்திருக்கிறது. ஆனால் நம் தமிழக அரசோ தமிழகத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் படை எடுப்பதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தமிழக வேளாண்துறையின் வாயிலாகத் தெரிவித்திருக்கிறது.

அது எப்படி நம் முதலமைச்சருக்குத் தெரிந்திருக்கும்? ஒரு வேளை அந்த வெட்டுக்கிளிகள் இவர்களிடத்தில் பேசியிருக்குமோ - நீங்களே தமிழகத்தை சூறையாடிவிட்டீர்கள் அதனால் நான் அங்கு வரப்போவதில்லை என்று? இல்லையெனில் வெட்டுக்கிளிகளின் சிறகுகளை தமிழக அரசு பிடித்து வைத்திருக்கிறதோ?

அதுசரி! கொரோனாவே தமிழக்கதில் 3 நாட்களில் முழுவதுமாக ஒழித்துக்காட்டுவேன் என்று சொன்னவர்கள்தானே. ஏற்கனவே, ஆட்சியாளர்கள் இந்த மாதிரியான சவால்களும், சவடால்களும் அடித்து அதற்காக மக்களாகிய நாம் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகமாக ஆயிற்று. தமிழக அரசே உங்கள் அலட்சியத்தால் , எழில்மிகு தமிழகத்தின் பேரழகை சீரழித்து விடாதீர்கள். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள்! செயல்படுங்கள்!

எழுத்து - அஜெய் வேலு

Also Read: “கொடூரமாக விவசாயப் பயிர்களை தாக்கும் வெட்டுக்கிளிகள்” : 27 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிகப்பெரிய தாக்குதல்!