Tamilnadu
“தடைவிதித்துள்ள இடத்தில் சவுடு மண் எடுக்க அனுமதிப்பதா?” - தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி!
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் பொதுமக்களின் துணையோடு குடிமராமத்து பணியை மேற்கொள்ள தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நீர்நிலைகளிலிருந்து களிமண், வண்டல் மண், சவுடு மண் ஆகியவற்றை விவசாயிகளும், மட்பாண்டம் செய்வோரும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை அதன் வரம்புக்குட்பட்ட 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதனை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு சவுடு மண்ணை எடுக்க அனுமதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகவே தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பை சட்ட விரோதமானது என அறிவித்து ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் இருந்து "அது செய்திக்குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விவசாய பணிக்காகவும் மட்பாண்டங்கள் செய்யவும் வண்டல்மண், களிமண் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "மதுரை கிளை 13 மாவட்டங்களில் சவுடு மண் எடுக்க தடை விதித்துள்ள நிலையில் எவ்வாறு அதையும் குறிப்பிட்டு செய்திக்குறிப்பு வெளியிட்டீர்கள்?” எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பு, "அவை நீங்கலாகவே அந்த செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பதில் மனுவை தாக்கல் செய்ய காலஅவகாசம் வேண்டும்" என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் அது தொடர்பாகவும், எத்தனை பதிவு செய்யப்பட்ட மட்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்தும் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!