Tamilnadu

“மாநிலங்களின் நிதி ஆதாரத்தை தாராளமாக வழங்கிடுக.. இது வெறும் சலுகையோ நன்கொடையோ அல்ல; உரிமை!” - கி.வீரமணி

கரோனா தொற்று அதிகமாகப் பாதிக்கப்பட இருக்கின்ற ஏழு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று!

மத்திய அரசு தனது கருவூலத்தை தாராளமாகத் திறக்கட்டும்!

இது வெறும் சலுகையோ - நன்கொடையோ அல்ல - உரிமை! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை (சுகாதாரத் துறை) இன்று ஒரு முக்கிய அறிவிப்பை - கரோனா தொற்று (கோவிட் -19) பற்றி வெளியிட்டுள்ளது.

இந்திய மக்களில் சுமார் 70 விழுக்காடு கரோனா பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கை - 11 முக்கிய பெருநகரங்களிலிருந்து - 7 முக்கிய மாநிலங்களில் பரவக்கூடிய அபாயம் உள்ளது.

மத்திய சுகாதாரத் துறையின் எச்சரிக்கை மணி!

மகாராட்டிரா, தமிழ்நாடு, குஜராத், டில்லி, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய ஏழு மாநிலங்களில் கரோனா தொற்று அதிகம் பரவக்கூடிய வாய்ப்பு - அடுத்துவரும் இரண்டு மாதங்களில் (ஜூன் - ஜூலை) அதிகம் இருக்கக்கூடும் என்பதால், அதிகமான பரிசோதனையும், நோய்க்கான சிகிச்சைக் கருவிகளையும், தீவிர சிகிச்சைப் பிரிவுகளை (ஐ.சி.யூ.) எப்போதும் தயார் நிலையிலும் வைத்திருக்க வேண்டுமென்று ஓர் எச்சரிக்கை மணி அடித்துள்ளனர் மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள்!

ஐ.சி.யூ. என்ற தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள படுக்கைகள், வெண்ட்டிலேட்டர்கள், பிராண வாயு வசதியுடன் கூடிய தனிமைப்படுத்தப்பட்டுள்ள படுக்கைகள் போன்றவற்றை அந்த ஏழு மாநிலங்களில் குறிப்பிட்டுள்ள - சுட்டிக்காட்டப்பட்டுள்ள தீவிர நோய்த்தாக்கு (ஹாட் ஸ்பாட்) பகுதிகளில் அதிகப்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தி எச்சரிக்கை மணி அடித்துள்ளது.

மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தினை தாராளமாக வழங்கிட மத்திய அரசு முன்வரவேண்டும். அதேநேரத்தில், மாநிலங்களுக்கு அவர்களது இத்தகைய சுகாதாரத் துறை அடிக்கட்டுமான (Health Infrastructure) வசதிகளைப் பெருக்குவதற்குரிய கூடுதல் நிதியையோ அல்லது மருத்துவ உபகரணங்களையோ, மத்திய பேரிடர் நிதியிலிருந்தோ அல்லது PM Cares Fund என்ற புதிதாகத் தொடங்கப்பட்ட நிதியிலிருந்தோ மாநிலங்களுக்கு அளிப்பதோடு, ஊரடங்கு காரணமாக வேலை வாய்ப்பிழந்து, வறுமையில் அன்றாட வாழ்வாதாரத்திற்கே அல்லலுறும் ஏழை, எளிய விவசாய மக்களுக்கு கையில் பணமாக (வெறும் கிசான் கார்டு அதற்குரிய நோக்கத்தை முழுமையாகப் பூர்த்தி செய்யாது) 13 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரொக்கப் பணம் தரும் திட்டம்போல - ஏதாவது செய்தால்தான் சரி என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், மற்ற தடுப்பு நடவடிக்கைகளால் சரியும் மாநில அரசுகளுக்கு நிதி ஆதாரத்தினை தாராளமாக வழங்கிட மத்திய அரசு முன்வரவேண்டும்.

வெறும் சலுகையோ, நன்கொடையோ அல்ல!

முதலாவது, மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய பாக்கி - நிலுவைத் தொகைகள் அளித்தாலே பெரிய உதவியாக அது அமையும். அதைப் பெறுவது அவர்களது உரிமை - அது வெறும் சலுகையோ, நன்கொடையோ அல்ல!

மத்திய அரசு தனது கருவூலத்தை தாராளமாகத் திறக்கட்டும்!

நிபந்தனைகளோடு இணைத்து இந்த நிதி உதவிகளைச் செய்வோம் என்று மத்திய அரசு கூறுவதை, பல மாநில முதலமைச்சர்கள் எதிர்த்து வருவதை மத்திய அரசு சுவர் எழுத்தாகக் கருதி, உடனடியாக அந்த நிபந்தனைகளைக் கைவிட்டுவிட்டு, உண்மையான கரோனா தடுப்புக்கு - அதுவும் இரண்டு மாதங்களில் ஆபத்து அதிகமாகும் என்ற அதிர்ச்சியூட்டும் செய்தி வரும் நிலையில், உடனே தாராளமாக தனது கருவூலத்தைத் திறக்கட்டும்.

மேற்குறிப்பிட்ட ஏழு மாநிலங்களுக்குத் தனி கவனத்துடன் உதவட்டும்!

Also Read: “ஊரடங்கை மீறி இறந்த பசுவுக்குப் பாடை கட்டி ஊர்வலம் சென்ற இந்துத்வா கும்பல்” : உ.பியில் தொடரும் அராஜகம்!