Tamilnadu
கொரோனா பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அ.தி.மு.க அரசு ஆர்.எஸ்.பாரதியை கைது செய்வதா? - வைகோ கண்டனம்!
கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி ஊழல்செய்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது நேற்று புகாரளித்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார்மனு தயாரித்த நிலையில், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரின் கைது நடவடிக்கை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அன்பகத்தில், கலைஞர் வாசகர் வட்டம் சார்பில் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தி.மு.க அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி தனது பேச்சுக்காக வருத்தம் தெரிவித்து இருந்தார்.
தன்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்கள் மனதைப் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கலைஞர் செய்த பணிகளைத்தான் எடுத்துக் கூறியிருந்தேன் என்று தெரிவித்து இருந்தார்.
கொரோனா பேரிடர் காலத்தில் தமிழகம் சந்தித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண திராணியற்ற அ.தி.மு.க. அரசு, தற்போது ஆலந்தூர் பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை ஏவி, கைது செய்திருக்கிறது.
எடப்பாடி பழனிச்சாமி அரசின் ஊழல் முகத்திரையைக் கிழிப்பதற்கும், அரசின் நிர்வாகச் சீர்கேடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து, எதிர்க் கட்சியின் கடமையைச் செவ்வனே நிறைவேற்றி வருகிறார். மிசா அடக்குமுறைச் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைவாசத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட இலட்சிய வீரர்தான் ஆர்.எஸ்.பாரதி.
கொரோனா தொற்று எனும் கொடும் கொள்ளை நோய் எங்கும் பரவி உயிர்களைச் சூறையாடி வரும் வேளையில், குற்றமற்ற ஆர்.எஸ்.பாரதியைச் சிறையில் அடைக்க முயல்வதன் மூலம், நடைபெறுகிற அரசு கொலைவெறி பிடித்த இதயமற்ற ஈனத்தனமான அரசு என்பது நிருபிக்கப்பட்டுவிட்டது.
பாசிச வெறிகொண்ட அ.தி.மு.க. அரசு, இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணராமல், காட்டுத் தர்பார் நடத்துகின்ற எடப்பாடி அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!