Tamilnadu

“ஊரடங்கில் அனுமதியின்றி சிலை வைத்து ரகளையில் ஈடுபட்ட குமரி பா.ஜ.க” - போக்குவரத்தே இல்லாத சாலையில் மறியல்!

கன்னியாகுமரி அருகே தென் தாமரைக்குளம் அருகில் கட்டுவிளை பகுதியில் ஐந்தடி உயரத்தில் பாரதமாதா சிலை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்டது.

போலிஸ் அனுமதி இல்லாமல் சிலை வைக்கப்பட்டதால் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்படும் என நினைத்து அந்த சிலையை அகற்ற போலிஸார் முடிவு செய்தனர். இதனையடுத்து கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலிஸார் சிலையை துணியால் மட்டும் மூடிவிட்டுச் சென்றனர்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து அறிந்த கன்னியாகுமரி பா.ஜ.க வினர் 50க்கும் மேற்பட்டோர் சிலை அமைக்கப்பட்ட பகுதியில் ஊரடங்கை மீறி கூடினர். மேலும் அங்கு மூடிவைக்கப்பட்டிருந்த சிலையைத் திறந்து மாலை அணிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி பாஸ்கரன் தலைமையிலான போலிஸார் மீண்டும் சிலையை மூடுவதற்கான நடவடிக்கையை எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.கவினர் போலிஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எந்தவித முன் அனுமதியுமின்றி சிலை வைத்ததால் பிரச்சனை ஏற்படும் அதனால் சிலையை மூடுகிறோம் என போலிஸ் தரப்பில் சமாதானம் பேசிய போதும்கூட காதில் வாங்கிக் கொள்ளாத பா.ஜ.கவினர் மீண்டும் சிலையை திறக்க முயன்றனர். இதனால் போலிஸார் பா.ஜ.கவை தடுத்தனர்.

இதனையடுத்து பா.ஜ.கவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலிஸார் அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்தனர். இதனையடுத்து பா.ஜ.கவினர் சிலர் நாகர்கோயில், கன்னியாகுமரி உட்பட 15 இடத்திற்கு மேல் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் போலிஸார் கைது செய்தனர். இருப்பினும் சாலைகளில் வாகனமே இல்லாத நிலையில், சாலை மறியல் செய்ததால் எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டில் இருக்கும் நிலையில் பா.ஜ.கவினர் இதுபோல திட்டமிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “விபத்து, உடல் சோர்வு; ஒரு நாளில் சராசரியாக 4 புலம் பெயர் தொழிலாளர்கள் மரணம்”: மோடி அரசால் நடந்த கொடூரம்!