Tamilnadu
கொரோனா ஊரடங்கு அச்சம்: சொந்த ஊர்களுக்கு செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்!
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த ஒன்றரை மாத காலமாக அமலில் இருப்பதால் தமிழகத்தில் தொழில் செய்வதற்காக வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு சாரை சாரையாகக் குவிந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கட்டிடத் தொழில் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்கள் கொரோனா பாதிப்பினால் சென்னையிலேயே சிக்கித் தவித்து வருகின்றனர். அன்றாடம் உணவு கிடைக்காமல் சாலை ஓரங்களில் தங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள முக்கிய மாநிலங்களுக்கு ரயில் சேவை தொடங்கும் என அறிவித்து இருந்தது. ரயில் டிக்கெட் இணையதளம் மூலமாகத்தான் பெற முடியும் என்றும் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் சென்னையில் இருந்து டெல்லிக்கு இரு முறை என 14-ம் தேதி மற்றும் ம் 16தேதி ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது. நாளை சென்னையில் இருந்து டெல்லி செல்லும் ரயிலில் செல்வதற்காக சென்னையைச் சுற்றியுள்ள வட மாநில தொழிலாளர்கள் இன்றே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
ரயில் முன்பதிவு செய்யவேண்டும் என்றே தெரியாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் தங்கி இருந்த வட மாநிலத் தொழிலாளர்கள் பலர் இன்று காலை முதலே சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர்.
மொழி அறியாது என்ன செய்வதேன்றே தெரியாமல் பல மணி நேரம் குடும்பம் குடும்பமாக தனிநபர் இடைவெளி இல்லாமல் நின்றுகொண்டு இருக்கிறார்கள் வடமாநில தொழிலாளர்கள்.
ஒருபுறம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என சொல்லிக்கொண்டு இருக்க, மறுபுறம் ஊரடங்கு விதிமுறைகளை காற்றில் பறக்க விடுவோரை காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தால் கொரோனா பாதிப்பு அதிகமாகுமோ என்ற அச்சம் அங்கிருக்கும் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், கொரோனா பரவலைத் தடுக்கவும் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!