Tamilnadu

மதுக்கடைத் திறப்புக்கு மக்கள் கடும் எதிர்ப்பு : அதிருப்தியை சமாளிக்க தேநீர்க் கடைகளைத் திறக்க அனுமதி!

அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், பெண்கள் அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி அரசு மதுக்கடைகளைத் திறந்து, விபத்துகளும் கொலைகளும் தாக்குதல்களுமாக இரண்டு நாள்கள் பெரும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட மக்களின் கடும் அதிருப்தியைச் சமாளிக்க தேநீர்க் கடைகளைத் திறக்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் மாநிலம் முழுவதும் தேநீர்க் கடைகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால் உணவகங்களில் பார்சல் மட்டும் வாங்கிச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் உணவகங்களில் வாங்குவதற்கும் ஆள் இல்லை; வேலைசெய்யவும் ஆள் இல்லை என்கிற நிலைமை உருவானதால், பெரும்பாலான இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டன. சென்னையில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த தேநீர்க் கடைகளும் பிறகு மூடப்படவேண்டும் என மாறிமாறி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒருவழியாக அனைத்து தேநீர்க் கடைகளும் மூடப்பட்டன.

ஒன்றரை மாதம் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்த நிலையில், மே 7ஆம் தேதியன்று அரசு மதுக்கடைகளை அரசு திறந்துவிட்டது. இதனால் பல மாவட்டங்களில் விபத்துகளும் குடும்ப வன்முறைகளும் கொலைகளும் நடந்தேறின. நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து, நேற்று மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள், மக்கள்நல அமைப்புகளின் கடும் எதிர்ப்பையும் மீறி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு தாக்கல்செய்யப்பட்டது.

இதற்கிடையில், தேநீர்க் கடைகளை மூடச் சொல்லிவிட்டு, மதுக்கடைகளை மட்டும் திறப்பதால் மட்டும் கொரோனா பரவாதா என சாமானிய மக்களே அரசுக்கு எதிரான கருத்துகளை வெளிப்படுத்தினர். இந்த அதிருப்தியைச் சமாளிக்கவும் மதுக்கடைத் திறப்புக்கு எதிரான மனநிலையை மிதமாக்கவும் வேண்டிய கட்டாயம் மாநில அரசுக்கு ஏற்பட்டது. இந்நிலையில், வரும் திங்கள் முதல் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளைத் தவிரத்த மற்ற இடங்களில் தேநீர்க் கடைகளைத் திறக்கலாம்; காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் ஐந்து முறை தேநீர்க் கடைகளில் கிருமி நாசினி தெளித்து கடையை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். கடையில் வாடிக்கையாளர்கள் நின்றோ அமர்ந்தோ உட்கொள்ள அனுமதி இல்லை. இதை கடைப்பிடிக்காத கடைகள் உடனே மூடப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதைத்தவிர சென்னையைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெட்ரோல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் 33 விழுக்காடு பணியாளர்களுடன் காலை பத்தரை மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் மாலை 7 மணி வரை அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் செயல்படலாம் என்றும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா மையத்தின் அடிப்படை நோக்கத்தையே நசுக்குவதா? - மருத்துவர்கள், சுகாதாரச் செயல்பாட்டாளர்கள் வருத்தம்!